நிலைமாற்றுகால நீதி செயற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு கால வரையறைகளை உள்ளடக்கிய மூலோபாயமொன்றை இலங்கை தயாரிக்கவேண்டும். இவ்வாறு தயாரிக்கப்படும் நீதிப் பொறிமுறையில் பாதுகாப்புத் துறை மறுசீரமைப்புக்களும் உள்ளடக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் வலியுறுத்தினார்.
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமை பேரவையின் 40வது கூட்டத்தொடரில் நேற்று இலங்கை விவகாரம் ஆராயப்பட்டது. இதில் இலங்கை தொடர்பில் தான் தயாரித்திருந்த எழுத்துமூல அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றும்போதே ஆணையாளர் இந்தக் கருத்தை வலியுறுத்தினார்.
நிலைமாற்றுகால நீதி செயற்பாட்டில் கொண்டுவரப்படும் பாதுகாப்புத்துறை மறுசீரமைப்பின் போது மனித உரிமை தொடர்பில் கேள்விக்குரிய அதிகாரிகளை பரிசீலித்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளும் உள்ளடக்கப்பட வேண்டும். இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட பதவிக்கு சர்வதேச மனித உரிமைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்கான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நியமித்தமை கவலையளிக்கிறது என்றும் அவர் தனது உரையின் போது சுட்டுக்காட்டினார்.
பொறுப்புக் கூறல் செயற்பாட்டில் மிகவும் குறைந்தளவான முன்னேற்றங்களே இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பான விரிவான விபரங்களை எனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளேன். 2009ஆம் ஆண்டு முரண்பாடுகளின் போது இடம்பெற்ற மோசமான குற்றச்செயல்கள் குறித்து நீதிப் பொறிமுறையொன்றை அமைப்பதில் குறைந்தளவான முன்னேற்றமே காணப்படுகிறது.
குற்றத்திலிருந்து தப்பிப்பது சமூக மற்றும் இனங்களுக்கிடையிலான வன்முறைகளுக்கு எண்ணெய் ஊற்றுவதாக அமைந்துவிடும். எனவே கடந்தகால குற்றச்செயல்கள் குறித்து உரிய நடவடிக்கைகளை எடுத்து பாதிக்கப்பட்ட சகல தரப்பினருக்கும் நீதியை நிலைநாட்ட வேண்டும்.
இவ்வாறான நிலையில் நிலைமாற்றுகால நீதிப்பொறிமுறையொன்றை தயாரிப்பதற்கு காலவரையறையுடன் கூடிய மூலோபாயமொன்றை இலங்கை தயாரிக்க வேண்டும்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்பட்டு அதன் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.
பாதுகாப்புத் தரப்பினரால் சித்திரவதைகள் மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்படுவதாக முறைப்பாடுகள் உள்ளன. இவை தொடர்பில் அரசாங்கம் வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைகளை நடத்த வேண்டும்.
நாற்பது வருடங்களுக்கு மேலாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரணதண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் குறித்து நாம் கவலையடைந்துள்ளோம்.
தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கான சூழல் ஏற்படுத்தப்படுவதுடன், அவற்றினால் முன்வைக்கப்படும் பரிந்துரைகள் சட்டத்தின் ஆட்சிக்கு அமைய நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.