மயிரிழையில் உயிர் தப்பிய பிரான்ஸ் டென்னிஸ் வீரர்: பரபரப்பு வீடியோ!
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பிரான்ஸ் வீரர் கேல் மோன்பிலிஸ் விளையாடிக்கொண்டு இருந்த போது ராட்சத கடிகாரம் ஒன்று அவர் மீது சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
இதில் கேல் மோன்பிலிஸ் மயிரிழையில் உயிர் தப்பினார். குறித்த நிகழ்வு வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் ஆகஸ்ட் 29ம் திகதி தொடங்கியது. இதில் நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று போட்டியில் பிரான்ஸ் வீரர் கேல் மோன்பிலிஸ், லக்சம்பர்க் வீரர் முல்லருடன் மோதினார்.
இதன்போது, முல்லர் அடித்த பந்தை எதிர்கொள்ள மோன்பிலிஸ் பின்னோக்கி நகர்ந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு மாட்டப்பட்டு இருந்த மிகப்பெரிய கடிகாரம் அவரின் மேல் விழ அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்.
எனினும், தொடர்ந்து விளையாடிய பிரான்ஸ் வீரர் கேல் மோன்பிலிஸ் 6-4, 6-2, 7-6 என்ற செட் கணக்கில் முல்லரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதிப்பெற்றார்.