நாட்டிலுள்ள இனங்களுக்கிடையில் ஒற்றுமையும், சகவாழ்வும் இன்றேல் இந்த நாடு அழிந்துவிடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை காலை மட்டக்களப்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இனங்களுக்கு மத்தியில் ஒற்றுமையினை ஏற்படுத்தவேண்டும் என்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். தேசிய சகவாழ்வு, ஒற்றுமையினை சிலர் தவறான முறையில் தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு அவர்கள் செய்வது தேசிய அநீதியாகவே நான் பார்க்கின்றேன்.
சில தினங்களுக்கு முன்னர் அம்பாறையில் நடைபெற்ற சம்பவம் மிகவும் கவலைக்குரியதாகும். மதஸ்தலங்கள் மீது தாக்குதல் நடாத்துவது மிகவும் தவறான விடயமாகும். இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களுக்கு இன மத பேதம் பாராமல் நடவடிக்கையெடுக்க வேண்டும். இல்லாது போனால் இந்த நாட்டு மக்கள் மத்தியில் ஒற்றுமையீனம் ஏற்படலாம். நாம் எல்லோரும் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும். எமது பொறுப்பினை தெரிந்து சரியாக பணியாற்றவேண்டும். நான் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றேன்.
இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும் சகவாழ்வுடனும் வாழவேண்டும். அதுவே நான் காணும் கனவாகும். அந்த கனவை நனவாக்க முடியாவிட்டால் இந்த நாடே அழிந்துவிடும். எல்லா பகுதிகளிலும் கடும் போக்காளர்கள் இருக்கின்றார்கள் என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
நாட்டில் உள்ள இவ்வாறான கடும் போக்காளர்கள், தீவிரவாதிகளை நாட்டு மக்கள் இனங்காண வேண்டும், தெரிந்து கொள்ளவேண்டும். நாங்கள் மிகவும் புத்திசாதுரியமாகவும் பொறுமையாகவும் செயற்படவேண்டும்.
இந்த நாட்டில் உள்ள அனைத்து இன மக்களும் இந்த நாட்டை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பாடுவார்கள் என நான் நம்புகின்றேன். இந்த நாட்டில் அரசியல் செய்யும் அனைத்து தரப்பினரும் இந்த பொறுப்பினை சரியாக புரிந்துகொள்ளவேண்டும். தமது அதிகாரங்கரங்களை நாட்டுக்காக அவர்கள் தியாகம் செய்யவேண்டும். நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் உண்மையான அன்பு கொண்டு செயற்படுபவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும். அந்த சமூக சமத்துவத்தினை நாங்கள் ஏற்படுத்தவேண்டும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.