மணிரத்னம் அடுத்து இயக்க உள்ள புதிய படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, பகத் பாசில், அரவிந்த்சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தற்போது இப்படத்திற்கான பாடல் கம்போசிங் கோவாவில் நடைபெற்று வருகிறது. இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பாடலாசிரியர் வைரமுத்து ஆகியோர் படத்திற்கான பாடல்களை உருவாக்கி வருகிறார்கள்.
இதனிடையே இப்படத்தில் இருந்து சிம்பு நீக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்குப் பதிலாக ஜெயம் ரவி நடிக்க உள்ளார் என்றும் செய்திகள் பரவி வருகின்றன. சிம்பு மீது சில தயாரிப்பாளர்கள் , தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்கள். அதற்கான விசாரணை நடந்து வருவதாகத் தெரிகிறது.
சமீபத்தில் கூட தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர்களில் ஒருவரான தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல்ராஜா, இது பற்றி இசை வெளியீட்டு விழா ஒன்றில் மறைமுகமாக அறிவித்தார்.
பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும் வரையில் சிம்புவை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்யக் கூடாது என முடிவெடுக்கப்பட்டுள்ளதா என்பதை இதுவரை யாரும் அறிவிக்கவில்லை. அதற்குள்ளாக இப்படி ஒரு செய்தி பரவி வருகிறது.