மணலாறு இதய பூமி மாவீரர் துயிலுமில்லத்தில் சில நிமிடங்கள்…!
தமிழ் மக்களின் விடுதலைக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து போர்க்களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவு கூருவதற்காக நவம்பர் மாதம் 21ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி வரை மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
அதன்படி மாவீரர் வாரத்தின் தொடக்க நாள் இன்றாகும். விடுதலைப் புலிப் போராளியாக காளமாடிய ஒருவர் களத்தில் வீரச்சாவடைந்தால் வீரச்சாவு என்றும் நோய்வாய்ப்பட்டு இறந்தால் சாவடைந்தார் என்று கூறப்பட்டிருந்து.
இருப்பினும் போராளியாக செயற்பட்டு இறந்த அனைவரும் வீரவேங்கை என்றே அழைக்கப்பட்டனர். பொதுவாக அனைவரும் மாவீரர்கள் என்றே அங்கீகரிக்கப்பட்டனர்.
ஆரம்பகாலத்தில் மாவீரர்கள் தீயில் சங்கமிக்கப்பட்டுள்ளனர். 1987ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய இராணுவம் தமிழர் தேசத்தை ஆக்கிரமித்திருந்தவேளை முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு பெரும்காட்டுப்பகுதியில் விடுதலைப் புலிகள் நிலைகொண்டிருந்தனர்.
அப்போது இந்திய இராணுவத்தினருடன் போராடி வீரமரணமடைந்த மாவீரர்களை தீயில் சங்கமித்தால் விடுதலைப் புலிகளின் நிலையை இந்திய இராணுவத்தினர் எளிதில் கண்டு பிடித்துவிடுவார்கள் என்று அவர்கள் மண்ணில் விதைக்கப்பட்டார்கள்.
அக்கணத்தில் ஒரு விடுதலை வீரனின் அமைதியான உறக்கம் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்களின் உணர்வுகளை தொட்டு நின்றுள்ளது. அன்றிலிருந்து மாவீரர்கள் மண்ணில் விதைக்கப்பட்டார்கள்.
இன்றைய சூழலில் தமிழ்மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள மாவீரர்களிற்காக அமைக்கப்பட்ட முதல் மாவீரர் துயிலுமில்லம் மணலாறு இதயபூமியின் மண்ணிலாகும்.
அதன் பின்னர் தமிழீழ விடுதலைக்காக போராடி வீரமரணமடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் துயிலும் இல்லங்கள் அமைக்கப்பட்டது.
தமிழர் தாயகப் பிரதேசத்தின் வலதுபுரத்தில் அமைந்துள்ள மாணலாற்று பிரதேசத்தை விடுதலைப் புலிகள் இதயபூமி என்று அழைத்தார்கள்.
சமகால தமிழ் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் முதன் முதலில் உருவாகிய மணலாற்று துயிலுமில்லத்தை மீட்கமுடியுமா என்பதே பொதுமக்களின் இன்றைய கேள்வியாக உள்ளது.
மணலாறு மாவீரர் துயிலுமில்லத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்கள் விதைக்கப்பட்டுள்ளார்கள். இன்றைய சூழலில் மணலாற்று துயிலுமில்லப் பிரதேசம் இராணுவ உயர் பாதுகாப்பு வலயம் என்பது குறிப்பிடத்தக்கது.