மங்கோலியாவில் 43 நாடுகள் பங்கேற்ற உலக பாடிபில்டிங் போட்டியில், ICF-யைச் சேர்ந்த தொழில்நுட்பவியலாளர் வி.ஜெயபிரகாஷ், 75 கிலோ பிரிவில் தங்கம் வென்றார். மங்கோலியாவில் உலக பாடிபில்டிங் மற்றும் உடற்கூறு விளையாட்டுப் போட்டி அக்டோபர் 2-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழக வீரர் ஜெயபிரகாஷ் தங்கம் வென்று, தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
“கடந்த முறை ஆசிய விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் பெற்றீர்கள். தற்போது தங்கம் பெற்ற நீங்கள் எத்தனை போட்டியாளர்களை வென்று முதல் இடத்தைப் பிடித்தீர்கள்?”
“மங்கோலியாவில் நடைபெற்ற உலக பாடிபில்டிங் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றேன். இந்தப் போட்டிக்கு வெவ்வேறு பிரிவுகளில் பங்கேற்க வேறு மாநிலங்களிலிருந்து 40 பேரும், தமிழகத்திலிருந்து இருவரும் சென்றோம். 75 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற 23 பேரில் முதலிடம் பெற்றேன். பல்வேறு பதக்கங்களைப் பெற்ற இந்தியா, ஒட்டுமொத்த பாடிபில்டிங் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பிடித்தது.”
“உலக அரங்கில் பதக்கம் பெற்றதை எப்படி உணர்கிறீர்கள்?”
“ஆசிய விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் பெற்றும் நம் நாட்டு தேசிய கீதம் அங்கு இசைக்கப்படவில்லை. அது நிறைவேற வேண்டும் என்ற கனவில் மிகுந்த பயிற்சியில் ஈடுபட்டேன். இந்த முறை அது நிகழ்ந்தது. நான் தேசியக் கொடியை ஏந்தி நிற்க, 43 நாடுகளும் எழுந்து நின்று இந்திய தேசிய கீதத்துக்கு மரியாதை செய்தார்கள். பெருமையாக இருந்தது.”
“மங்கோலியாவின் பருவநிலை, இந்தியர்களுக்கு ஏற்புடையதாக இருந்ததா?”
“சென்னை போன்று இல்லாமல் மங்கோலியாவின் பருவநிலை -5 டிகிரி அளவிலிருந்தது. பருவநிலையை ஏற்க சிறிது சிரமமாக இருந்தாலும், முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதால் சமாளிக்கத் தேவையான உபகரணங்களை எடுத்துச்சென்றிருந்தோம்.”
“இந்தப் போட்டியில் பங்கேற்கத் தங்களுக்காக உதவிகள் மற்றும் வசதிகள் சரிவர செய்து தரப்பட்டனவா?”
“இந்தப் போட்டியில் நான் பங்கேற்க ஐ.சி.எஃப்-ன் பங்கு முக்கியமானது. எனது பயிற்சிக்காக நிறைய உதவிகள் செய்து தந்தார்கள். தமிழக அரசு சார்பில் தற்போது வரை யாரும் அழைத்துப் பேசவில்லை.”
“அடுத்ததாக என்ன மாதிரியான போட்டிகளில் பங்கேற்க இருக்கிறீர்கள்? அதற்கு என்ன ஆயத்தப் பணிகளில் ஈடுபடுகிறீர்கள்?
“அடுத்தடுத்து வரும் மிஸ்டர் யுனிவர்ஸ், ஒலிம்பியா போட்டிகளில் பங்கேற்க உள்ளேன். இந்தியாவுக்காக பதக்கங்களை வெல்வதே என் ஆசை. மத்திய, மாநில அரசுகள் உதவினால் இன்னும் அதிகமான போட்டிகளில் என்னால் பங்கேற்க முடியும்.”
“என்ன மாதிரியான பயிற்சிகளையும் உணவுகளையும் எடுத்துக்கொள்கிறீர்கள்?”
“காலை இரண்டு முதல் மூன்று மணி நேரமும், மாலை மூன்று மணி நேரமும் பயிற்சி மேற்கொள்வேன். பயிற்சி மேற்கொள்ளும்போது மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை புரோட்டின் சக்தி நிறைந்த முட்டையின் வெள்ளைக் கரு, காய்கறி போன்றவற்றை உட்கொள்வேன்.”
ஐ.சி.எஃப் சார்பில் கூறும்போது, ஐ.சி.எஃப் தொடங்கப்பட்ட 1955-ம் ஆண்டிலிருந்து இந்தச் சாதனையை யாரும் படைக்கவில்லை. தற்போது இவரின் சாதனை வரலாற்றுப் பதிவாகும்.
ஐந்து முறை தேசிய அளவில் தங்கப் பதக்கம், ஆசியப் போட்டியில் வெள்ளிப் பதக்கம், தற்போது உலக பாடிபில்டிங் போட்டியில் தங்கம் வென்றுள்ள வி.ஜெயபிரகாஷ் போன்றோர்தான் உலக அரங்கில் தமிழகத்துக்கான அடையாளத்தைத் தேடித்தருகிறார்கள்.