மங்கள சமரவீரவின் ஐ.நா உரையினை அம்பலப்படுத்திய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத் தொடரில் நடந்து முடிந்த பத்து விடயங்களை முன்வைத்து இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் ஐ.நா உரைக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மறுஅறிக்கை விடுத்துள்ளது.
நடந்த முடிந்த ஐ.நா மனித உரிமைச்சபையின் கூட்டத் தொடரில் இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை நியாயப்படுத்தி அறிக்கையளித்திருந்தார்.
இந்த நிலையில், மங்களவின் அறிக்கைக்கு பதிலறிக்கையாக, பத்து விடயங்களை பிரதானமாக சுட்டிக்காட்டி, இலங்கையின் முன்னுக்குபின் முரணான நிலைப்பாடுகளையும், பொறுப்பற்ற போக்கினையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அம்பலப்படுத்தியுள்ளார்.
எட்டு பக்கங்களை கொண்ட அறிக்கையின் முக்கிய விடயங்கள் பின்வருமாறு அமைகின்றது.
1. ஐநா மனித உரிமை மன்றத்தின் 30.1 தீர்மானத்துக்கும் மங்கள சமரவீரவின் உரைக்கும் முரண்பாடு உள்ளது.
அரசின், மக்களின், பாதுகாப்புப் படைகளின் கண்ணியம் காக்கவே தீர்மானத்தைச் செயலாக்கப் போவதாக அதிபர் மைத்திரிபால சிறிசேனா சொன்னதையே இவரும் சொல்கிறார். இது மனித உரிமை மன்ற உயர் ஆணையர் அறிக்கையின் படி போர்க் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்போரைக் காக்கும் கண்ணோட்டமாகும். மாற்றநோக்கு நீதிக்கு இலங்கை தரும் இந்த விபரீத விளக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
2. இலங்கை அரசின் செயற்பாட்டில் சிறிதளவு முன்னேற்றம் இருப்பதாக உயர் ஆணையர் தம் வாய்மொழி அறிக்கையில் கூறியிருப்பினும், நீதிக்கான உறுதி தேக்கமடையும் ஆபத்தையும் சுட்டியுள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் பெரும்பாலும் தமிழர்கள் கைது செய்யப்படுவது தொடர்கிறது என்றும், கொலைகளுக்கும் ஆள்கடத்தலுக்கும் காரணமானவர்கள் தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார்கள் என்றும் கவலை தெரிவித்துள்ளார். இதற்கெல்லாம் சமரவீரவிடம் பதிலே இல்லை.
3. உயர் ஆணையர் 2015 செப்டெம்பர் (OISL) அறிக்கையில் அடைந்த முடிவுகளை மங்கள சமரவீர ஒப்புக்கொள்ளவே இல்லை. காணாமலடித்த வன்செயல்கள், ஆள்கடத்தல்-கொலைகள், பாலியல் துன்புறுத்தல், குற்றச்சாட்டுகளே இல்லாமல் முன்னாள் புலிகளைச் சிறைப்படுத்தல் – அறிக்கை குறிப்பிடும் இந்தக் குற்றச்சாட்டுகள் எதையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை.
மீளிணக்கம், நீதி தொடர்பாக ‘மெல்ல மெல்ல விரைவுபடுத்துவது’தான் அரசின் கொள்கையாம்!
குற்றங்கள் நடந்து ஏழாண்டு கழிந்த பின்! நீதிப் பொறிமுறை அமைந்தாலும் போரின் இறுதிக்கட்டம் பற்றிய பரிசீலனையே இருக்காது என்னும் பொருள்பட மங்கள சமரவீர பேசியுள்ளார். இது கவலைக்குரியது.
4. காணாமற்போனோர் செயலகம் (OMP) அமைப்பதற்கு முன் ஏற்கெனவே உறுதியளித்த படி பாதிப்புற்றோருடன் கலந்து பேசவில்லை என்பது பற்றி மங்கள சமரவீராவிடம் விளக்கமேதும் இல்லை. காணாமலடிக்கும் வன்செயலால் பாதிப்புற்றவர்களுக்கு பன்னாட்டு உடன்படிக்கையின் படி இழப்பீடு தர மறுப்பது பற்றியும் விளக்கமில்லை.
5. தமிழர் தாயகமான வடக்கு-கிழக்கிலிருந்து இலங்கை படைகள் விலக்கிக் கொள்வது பற்றி மங்கள சமரவீர பேசவே இல்லை. படைநீக்கத்துக்கு அடையாள முயற்சி கூட இல்லை.
6. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கம் செய்வதாக 30.1 தீர்மானத்தில் கொடுத்த உறுதிமொழியை இலங்கை நிறைவேற்றவில்லை. அது கொண்டுவரப்போவதாகச் சொல்லும் புதிய சட்டம் பழைய சட்டத்தை விட மோசமாக இருக்கக் கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் அச்சம் தெரிவித்துள்ளார்.
7. தீர்மானத்தில் இலங்கை உறுதியளித்த படி உள்நாட்டு நீதிப் பொறிமுறையில் பன்னாட்டு நீதிபதிகளைச் சேர்க்க உயர் ஆணையர் மீண்டும் மீண்டும் வலியுறுத்திய போதிலும் இலங்கை அதிபர் மீண்டும் மீண்டும் மறுத்து வருகிறார். இந்த முரணை மறைக்க மங்கள சமரவீர சாதுரியமாக சொற்சிலம்பம் ஆடுகிறார். ஆயத்தங்கள் செய்து கொண்டிருப்பதாகச் சொல்லியே நீதிப் பொறிமுறை ஏதும் அமைக்காமல் இழுத்தடிக்கும் தந்திரம்தான் இது.
8. மங்கள சமரவீர சொல்லும் ஜனநாயக மீட்சி சிங்கள சமூகத்திற்குத் தானே தவிர தமிழ்ச் சமூகத்திற்கன்று. தமிழர்களின் தேசமென்னும் தகுதியையும் சுயநிர்ணய உரிமையையும் அரசு ஏற்றுக் கொள்ளாத வரை ஜனநாயகமும் தனிமனித உரிமைகளும் செழிக்கப்போவதில்லை. மீளிணக்கம் என்ற பெயரில் கலப்புத் திருமணங்கள், இராணுவ நல்லெண்ணச் சிற்றூர்கள் என்று பல்வேறு வழிகளில் தமிழினத்தை உட்செரிக்கும் கபட முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது.
9. இந்த நூற்றாண்டின் ஆகப் பெரிய கொடுஞ்செயல் நிகழ்ந்து இலட்சம் மக்கள் உயிரிழந்து ஏழாண்டுக்கு மேலாகி விட்டது. நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை மங்கி வருகிறது. இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி நீதி வழங்கச் செய்திட அனைத்துலகப் பன்னாட்டுச் சமூகத்தை வேண்டுகிறோம். இலங்கை அரசங்கம் இதைச் செய்யும் என்றோ, இன ஒடுக்குமுறையைக் கைவிடும் என்றோ நாம் நம்பவில்லை.
10. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நீதிக்கான முயற்சியை ஐநா ஊடாகத் தொடரும் போதே, ஐநாவுக்கு வெளியிலும் தொடர்ந்து பாடாற்றும்.
இவ்வாறு பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் அவர்களது மறுப்பறுக்கையின் பிரதான விடயங்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.