தமிழ் திரையுலகத்திற்கு புதுமுக நாயகர்களின் வரவுகள் அதிகரித்து வரும் தருணத்தில் ‘மக்கள் நாயகன்’ ராமராஜன், புதுமுக இளம் நாயகன் ஜெக வீர் எனும் நடிகரை கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தி இருக்கிறார். இதற்கான அறிமுக கூட்டம் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ 2 கே லவ் ஸ்டோரி’ எனும் திரைப்படத்தில் ஜெகவீர் புதுமுக நாயகனாக அறிமுகமாகிறார்.
இவருடன் மீனாட்சி கோவிந்தராஜன், முருகானந்தம், சிங்கம் புலி, ஜி. பி. முத்து, வினோதினி வைத்தியநாதன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயப்பிரகாஷ், துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
வி. எஸ். ஆனந்த் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தை சிட்டி லைட் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்பிரமணியன் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் இறுதி கட்டத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஜெகவீரை அறிமுகப்படுத்தும் விழா நடைபெற்றது. இதன்போது ‘மக்கள் நாயகன்’ ராமராஜன் சிறப்பு அதிதியாக பங்கு பற்றினார்.
படத்தைப் பற்றி இயக்குநர் சுசீந்திரன் பேசுகையில், ” தமிழகத்தின் மாநகரங்களில் ஒன்றான கோயம்புத்தூரை கதைக் களமாக கொண்டு, திருமணங்களுக்கு புகைப்படங்களை எடுத்து கொடுக்கும் குழு ஒன்றின் உறுப்பினர்களுக்கு இடையே நடைபெறும் சம்பவங்களையும், அவர்களது வாழ்வியலையும் மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.
இன்றைய நவீன கால இளைஞர்களின் இளைஞர்கள் காதலுக்கும் உறவுக்கும் நட்புக்கும் எந்த வகையினதான எல்லைக்கோட்டை வரையறுத்துக் கொண்டு செயல்படுகிறார்கள் என்பதையும் விவரித்திருக்கிறோம்.
இதனுடன் சமூகத்திற்கு தேவையான ஒரு செய்தியையும் பதிவு செய்து இருக்கிறோம்” என்றார்.