வடக்கில் தமிழ் மக்களின் காணிகளில் இராணுவத்தினர் தொடர்ச்சியாக நிலைகொண்டுள்ளனர், அவற்றை பொது மக்கள் தமது போராட்டங்களின் ஊடாக வெளிப்படுத்துகின்றனர்.
இந்த போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் பல ஆண்டுகளாக தமிழ் மக்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் தமது காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளதாகவும் அவற்றை மீட்டுத்தருமாறும் பொதுமக்கள் வடமாகாண முதலமைச்சருக்கு தெரிவித்திருந்தனர்.
குறித்த மக்களின் கோரிக்கைகளை ஏற்ற முதல்வர் அந்த பிரச்சினைகளை ஆராய்வதற்கு குழு ஒன்றை அமைத்து, அந்த குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணித்திருந்தார்.
அதன்படி இந்தக் குழு பொதுமக்களின் காணிகளில் இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளமை தொடர்பில் நன்கு அறிந்து அறிக்கைகளை முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளனர்.
பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அண்மையில் சந்தித்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பொதுமக்களின் காணிகள் இராணுவத்தினர் வசமுள்ளது. அவற்றை அந்தந்த மக்களிடம் கையளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு ஜனாதிபதியும் குறித்த காணிகளை கையகப்படுத்தி வைத்திருக்கும் இராணுவத்தரப்பினருடன் பேசிய சில காலங்களின் பின்னர் பொதுமக்களின் காணிகள் விரைவில் கையளிக்கப்படும் என்று முதல்வருக்கு ஜனாதிபதி உத்தியோகப்பூர்வமாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், காணிகள் விடுவிப்பது தொடர்பாக நான் பேசவேண்டிய முறையில் ஜனாதிபதியுடன் பேசி முடித்து விட்டேன். அதற்கமைய அவர் எனக்கு நல்ல முடிவையும் வழங்கியுள்ளார். என போராட்டத்தில் ஈடுபடும் மக்களிடம் முதலமைச்சர் கூறியுள்ளார்.
ஆனால் அந்த முடிவில் அரசு நேர காலத்தை இழுத்தடிக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், வடக்கின் முதல்வர் வடக்கை அபிவிருத்தி செய்வதிலும் பொதுமக்களின் பொருளாதாரப் பிரச்சினைகளை சீர் செய்வதிலும் தனது கவனத்தை செலுத்தியுள்ளார்.
இதன்படி அவர் பல்வேறுபட்ட அபிவிருத்தி முயற்சியில் ஈடுபட்டுள்ளதோடு பொதுமக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கும் முயற்சிக்கின்றார்.