முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பினை குறைத்து அவரை கொன்று விடவே அரசு திட்டம் தீட்டிக்கொண்டு வருகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.
இன்றைய தினம் பாராளுமன்றத்தில், மகிந்தவின் பாதுகாப்பு தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே அவர் இதனைக் கூறினார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்தவர். எனினும் இப்போது அவருடைய பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது இதற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.
விமலுடைய கேள்விக்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க பதில் அளிக்கையில்,
இலங்கையில் பிரபுக்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு எந்த வகையிலும் பாதுகாப்பு தொடர்பில் சிக்கல்கள் ஏற்பட்டதில்லை.
அவ்வாறான ஒருவருக்கு காலத்திற்கு ஏற்றாப் போல் பாதுகாப்பை அதிகரித்தும், குறைத்தும் கொண்டு வரப்பட்டுள்ளது.
அரசியல் தலைவர் ஒருவரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் இடத்தில் அவருக்கான பாதுகாப்பு தரப்பு அதிகரிக்கப்படும். அதேபோன்று எந்த வித அச்சுறுத்தலும் இல்லாத காலக்கட்டத்தில் பாதுகாப்பு குறைக்கப்படும் இதுவே வழக்கம்.
தற்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பிரிவில் அதிகமாக பொலிஸார் உள்ளடக்கப்பட்டதால் அவர்களை மாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்தது.
எனினும் மகிந்த ராஜபக்சவிற்கு பாதுகாப்பு அவசியமாகும் போது மீண்டும் பாதுகாப்பு அதிகரிக்கப்படும். இது குறித்த தெளிவான விளக்கத்தை பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவிற்கு கொடுத்துள்ளோம்.
மேலும், இப்போதும் மகிந்தவின் பாதுகாப்பு நிமித்தம் விஷேட படையணியையும் உள்ளடக்கிய 187 பேர் பணியில் உள்ளனர் என்பதனை கூறுவதோடு தேவைப்படும் போது அதனை அதிகரிக்கவும் முடியும் என அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, மே தினம் காரணமாக ஏற்பட்ட பயத்தினாலேயே மகிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த அவருக்கு எப்போதும் அச்சுறுத்தல் இருக்கின்றது.
திட்டமிட்டு அவருடைய பாதுகாப்பை குறைத்து அவரை கொன்று விடவே முயற்சி நடக்கின்றது என விமல் வீரவங்ச தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.