புதிய அரசமைப்புக்கு எதிராக மகாநாயக்க தேரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில்,
அவர்களைச் சந்தித்துப் புதிய அரசமைப்புக்கான முக்கியத்துவம் குறித்துத் தெளிவுபடுத்துவதற்கு அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகளின் பிரமுகர் கள் விரைவில் மகாநாயக்க தேரர்களை விரைவில் சந்திக்கவுள்ளனர்.
மல்வத்த பீடத்தின் மகாநாயக்க தேரர் வெளிநாடு சென்றிருப்பதால் அவர் நாடு திரும்பியதும் மேற்படி சந்திப்புகள் ஆரம்பமாகும் என்று தெரியவருகின்றது.
புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை மீது எதிர்வரும் 30ஆம், 31ஆம் திகதிகளிலும், அடுத்த மாதம் முதலாம் திகதியும் அரசமைப்பு நிர்ணய சபையில் விவாதம் நடைபெறவுள்ளது.
புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சியை உடனடியாகக் கைவிடுமாறு மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளதால்,
அவர்களைச் சந்தித்து தமது கட்சிகளின் நிலைப்பாடுகளை அறிவிக்காமல் விவாதத்தில் பங்கேற்றால் அது சிக்கலாக அமைந்துவிடும் என்பதாலேயே சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க உட்பட கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அடங்கிய குழு வினரே மகாநாயக்க தேரர்களைச் சந்திக்கவுள்ளனர்.
ஒற்றையாட்சி, நிறைவேற்று அரச தலைவர் முறைமை நீக்கப்படக் கூடாது உள்ளிட்ட விடயங்களில் மகாநாயக்க தேரர்களின் நிலைப்பாட்டிலேயே சுதந்திரக் கட்சி,
ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.