உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான பிரிவில் நடந்த 800 மீட்டர் ஓட்டத்தில் தென் ஆப்பிரிக்க வீராங்கனையான செமன்யா, தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் நேற்று முன்தினம், பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க வீராங்கனையான செமன்யா, பந்தய தூரத்தை 1 நிமிடம் 55.1 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். இவர் ஏற்கெனவே இப்பிரிவில் ஒலிம்பிக் சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் புரூண்டி நாட்டு வீராங்கனையான பிரான்சின் நியோன்சாபா 1 நிமிடம் 55.92 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். அமெரிக்க வீராங்கனையான அஜி வில்சன் இப்பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். அவர் பந்தய தூரத்தை 1 நிமிடம் 56.65 விநாடிகளில் கடந்தார்.
இப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது குறித்து செமன்யா கூறும்போது, “லண்டனில் உள்ள ரசிகர்கள் எனக்கு மிகுந்த உற்சாகம் அளித்தனர். என் வெற்றிக்கு இது மிகவும் உதவிகரமாக இருந்தது” என்றார்.
பெண்களுக்கான பிரிவில் நடந்த 4×400 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்க அணி தங்கப் பதக்கம் வென்றது. அந்த அணி பந்தய தூரத்தை 3 நிமிடங்கள் 19.02 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தது.
இப்போட்டியில் பந்தய தூரத்தை 3 நிமிடம் 25 விநாடிகளில் கடந்த இங்கிலாந்து அணிக்கு வெள்ளிப் பதக்கமும், 3 நிமிடம் 25.41 விநாடிகளில் கடந்த போலந்து அணிக்கு வெண்கலப் பதக்கமும் கிடைத்தது