ஊழல் வழக்குகளின் விசாரணைக்காக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் லண்டனிலிருந்து பாகிஸ்தான் திரும்பியுள்ளார்.
உலகில் உள்ள பல முக்கியப் பிரமுகர்கள், ஊழல்செய்து சேர்த்த கறுப்புப் பணத்தைப் பாதுகாக்க, மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் முதலீடுசெய்து வருவதாக, ‘பனாமா லீக்ஸ்’ ஒரு பரபரப்பான செய்தியை வெளியிட்டது. உலகத்தையே பரபரக்கச்செய்த ஊழல் வெளியீட்டுப் பட்டியலில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் பெயரும் சிக்கியிருந்தது, பரபரப்பை அதிகப்படுத்தியது. நவாஸ் ஷெரிஃப் மட்டுமல்லாமல், அவரின் மகன்களும் இந்த ஊழல் வழக்கில் உள்ளதால், அவர்கள்மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கின் இறுதித் தீர்ப்பின்படி நவாஸ் ஷெரிஃபை பிரதமர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்து, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நவாஸ் ஷெரிஃப் குடும்பத்துக்குச் சொந்தமான ‘ஃபிளாக்ஷிப்’ நிதி நிறுவனம் வெளிநாடுகளில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் நடந்ததாகவும் நவாஸ்மீது தேசியப் பொறுப்புடைமை நீதிமன்ற நீதிபதி முஹம்மது பஷிர் ஒரு குற்றச்சாட்டைப் பதிவுசெய்தார். மேலும், மூன்று ஊழல் வழக்குகள் விசாரணையில் உள்ள போது எந்தவொரு விசாரணையிலும் நவாஸ் பங்குபெறாததால் அவர் மீது பிடிவாரன்ட் பிறப்பித்து இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், வழக்குகளின் போக்கு தீவிரமாவதை அடுத்து லண்டனில் தன் மனைவியின் மருத்துவச் சிகிச்சைக்காக உடன் இருந்து வந்த நவாஸ் தற்போது நாடு திரும்பியுள்ளார். நவாஸ் மகன்கள் மற்றும் மகள் மீது நீதிமன்றத்தின் பிடி இறுக்கப்பட்டுள்ளது.