மகனை கொடூரமாக சித்ரவதை செய்த பொலிஸ் தந்தை
கனடா நாட்டில் பொலிஸ் அதிகாரியான தந்தை ஒருவர் தனது மகனை 3 ஆண்டுகளாக சித்ரவதை செய்த குற்றத்திற்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் தான் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதே நகரில் பொலிஸ் அதிகாரியாக பணிபுரிந்து வந்த 45 வயதான தந்தை ஒருவர் அவரது 11 வயது மகனை பல்வேறு சித்ரவதைகளுக்கு உள்ளாக்கியுள்ளார்.
வீட்டு அறையில் அடைத்து வைத்து உணவு, தண்ணீர் எதுவும் கொடுக்காமல் அடித்து, உதைத்து கொடுமைகளை செய்துள்ளார்.
சில நேரங்களில் சிகரெட் பற்ற வைத்து சிறுவனின் அந்தரங்க பகுதியில் தீக்காயங்களை ஏற்படுத்தியுள்ளார்.
இக்கொடூரக் காட்சிகளை அவர் தனது செல்போனில் வீடியோவும் எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு வீட்டை விட்டு தப்பிய சிறுவன் உணவு, தண்ணீர் கேட்டு அலைந்தபோது பொலிசாரிடம் சிக்கியுள்ளான்.
பின்னர், சிறுவனின் தந்தை பற்றிய உண்மைகள் வெளியே தெரியவந்ததுடன் அவரை கைது செய்து சிறுவனை அவரது உறவினர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
நீண்ட மாதங்களாக நடைபெற்று வந்த விசாரணையின் இறுதியில் கடந்த நவம்பர் மாதம் தந்தை குற்றவாளி என ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.
இந்நிலையில், குற்றவாளிக்கு தீர்ப்பு வழங்குவது குறித்து நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடைபெற்றுள்ளது.
அப்போது, ‘என் மகனிடம் ஓர் அரக்கன் போல் நடந்துக்கொண்டது உண்மை தான். இதற்காக எனது மகனிடமும், நீதிபதியிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என தந்தை கண்ணீருடன் பேசியுள்ளார்.
பெற்ற மகன் என்றும் பாராமல் கொடூரமாக சித்ரவதை செய்த தந்தைக்கு அதிகபட்சமாக 23 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கினால் தான் சமூகத்தில் இதுபோன்ற குற்றங்கள் நிகழாது என வழக்கறிஞர் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வழக்கறிஞரின் வாதத்திற்கு பிறகு இறுதியான தீர்ப்பு வழங்கும் நாளை எதிர்வரும் ஏப்ரல் 12-ம் திகதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.