போலந்து நாட்டில் ஹிட்லரின் சித்ரவதை முகாமை பார்வையிட்ட போப் பிரான்சிஸ்
போலந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் போப் பிரான்சிஸ் ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் யூத மக்களை கொடுமைப்படுத்தி கொல்ல பயன்படுத்தப்பட்ட ஆஸ்ச்விட்ஸ் சித்ரவதை முகாமை பார்வையிட்டார்.
போலந்து நாட்டில் ஹிட்லரின் சித்ரவதை முகாமை பார்வையிட்ட போப் பிரான்சிஸ்
வார்சா:
போலந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் போப் பிரான்சிஸ் ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் யூத மக்களை கொடுமைப்படுத்தி கொல்ல பயன்படுத்தப்பட்ட ஆஸ்ச்விட்ஸ் சித்ரவதை முகாமை பார்வையிட்டார்.
ஆட்சியின் மூலம் கிடைக்கும் அதிகாரத்தை வைத்து ஆளுங்கட்சிக்கு வேண்டாதவர்களையும், வேறுபட்ட இன மக்களையும் அழித்தொழிக்கும் முறையை ஜெர்மனி நாட்டின் சர்வாதிகாரியான அடால்ப் ஹிட்லர் கடந்த 1933-ம் ஆண்டு துவக்கி வைத்தார்.
முதலாவதாக “நாஜி’ கட்சியைத் தவிர மற்ற அரசியல் கட்சிகள் எல்லாம் சட்டவிரோதமான கட்சிகளாக சேர்க்கப்பட்டன, அடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர், யூத இனத்தவர்கள் கைது செய்யப்பட்டு “கான்சென்ட்ரேஷன் காம்ப்’ (திருத்தியமைக்கும் முகாம்) என்ற இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடைப்பிடித்த அரசியல் கொள்கையை ஒருவன் மாற்றிக்கொள்ளலாம்.
ஆனால், பிறந்த இனத்தை ஒருவனால் எப்படி திருத்திக்கொள்ள முடியும்? அப்படிப்பட்டவர்களை மனித இனத்திலிருந்தே – மனித வாழ்விலிருந்தே மாற்றிப் பிணமாக்கும் திட்டங்களில் ஹிட்லர் ஆட்சி ஈடுபட்டது. அதற்காகச் சித்ரவதை சிறைக்கூடங்கள் பயன்பட்டது.
இவ்வகையிலான முதலாவது சித்ரவதைச் சிறைக்கூடம் 1933-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஜெர்மனியில் உள்ள டச்சோவ் என்ற ஊரில் கட்டப்பட்டது. 1933 முதல் 1945-இல் ஹிட்லரின் ஆட்சி தோற்கடிக்கப்படும்வரை அந்த ஒரு முகாமில் மட்டும் அடைக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 35 லட்சம்.
அவர்களை நிறுத்திவைத்தும், ஓடவைத்தும் குறி பார்த்து சுட நாஜிப் படைவீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சிக் களமாக அதைப் பயன்படுத்தினார்களாம். போர் முடியும் காலகட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்களை வெளியேற்றி அவர்கள் சென்ற இடம் தெரியாமல் ஆக்கப்பட்டனர்.
1939-க்குப் பிறகு ஹிட்லரின் படைபலம் ஐரோப்பியக் கண்டத்தின் பல நாடுகளை அடிமைப்படுத்தியபோது, அந்த நாடுகளில் எல்லாம் சுமார் 1,200 சித்ரவதை சிறைச்சாலைகள் உருவாக்கப்பட்டன.
இரண்டாவது உலகப் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 6 கோடி இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. குண்டு வீச்சுகளில் சிக்கியும் – பஞ்சம், பட்டினி, நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டும் – இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை மட்டும் 4 கோடிக்குமேல் இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில், போலந்து நாட்டில் ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் யூத மக்களை கொடுமைப்படுத்தி கொல்ல போலந்து நாட்டின் ஆஸ்ச்விட்ஸ் நகரில் உருவாக்கப்பட்ட சித்ரவதை முகாமை கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மதகுருவான போப் பிரான்சிஸ் நேற்று பார்வையிட்டார்.
சுமார் 15 நிமிடங்கள் இந்த முகாமுக்குள் அமர்ந்து ஹிட்லரின் கொடுமையால் பலியான உயிர்களின் ஆன்ம சாந்திக்காக பிரார்த்தனை நடத்திய போப் பிரான்சிஸ் மிகவும் சோகமாக காணப்பட்டார். இந்த முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்து, பின்னர் அமெரிக்க படைகளால் மீட்கப்பட்டவர்களில் சிலர் இன்னும் உயிருடன் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களை சந்தித்த போப், அவர்களின் கன்னங்களில் முத்தமிட்டு ஆசீர்வதித்தார். அவர்களில் ஒருவர் சித்ரவதை முகாமில் தான் அடைத்து வைத்திருக்கப்பட்டபோது எடுத்த புகைப்படத்தை போப்பிடம் காண்பித்து, அதில் அவரை கையொப்பமிட்டு தருமாறு கேட்டு கொண்டார். போப் பிரான்சிஸ் அதில் கையொப்பமிட்டார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போப், ஹிட்லர் காலத்து கொடுமைகள் (அகதிகள் முகாம்கள் மற்றும் சிறைச்சாலைகளில்) இன்றளவும் தொடர்ந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.