போர்க்குற்ற விவகாரம்! அமெரிக்காவிடம் சரணடையும் இலங்கை
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஜெனீவா பிரேரணைக்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ட்ரம்ப் இலங்கை உள்ளிட்ட நாடுகள் தொடர்பில் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிப்பதுடன், சர்வதேச அநீதிகளை உதாசீனம் செய்யும் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்.
எனினும் அமெரிக்காவின் முன்னைய நிர்வாகம் உலகளாவிய சிறுபான்மை இனங்கள் தொடர்பில் கரிசனையுடன் செயற்பட்டிருந்தது. இதன் காரணமாகவே இலங்கையில் நடைபெற்ற விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் கலப்பு பொறிமுறை விசாரணையொன்றை மனித உரிமைகள் ஆணையத்தில் வலியுறுத்தியிருந்தது.
இலங்கைக்கு எதிராக சர்வதேச அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பாக நியாயமான விசாரணையொன்றை மேற்கொள்ள வலியுறுத்தும் நோக்கில் இந்தப் பிரேரணை கொண்டு வரப்பட்டிருந்தது. எனினும் இலங்கை அரசாங்கத்துக்கு விதிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் குறித்த விசாரணை தொடர்பில் எதுவித நடவடிக்கைகளும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ட்ரம்பின் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான போக்கை சாதகமாக கையாண்டு, குறித்த பிரேரணையை கிடப்பில் போடும் முயற்சிகள் தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் தற்போது திரும்பியுள்ளது.
இதன் ஒரு கட்டமாக அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் அமெரிக்காவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதுடன், இன்று அமெரிக்காவின் ராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் இது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.