போர்க்குற்ற விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவையா? அடிப்படை உரிமை மனு தள்ளுபடி
போர் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகள் அழைக்கப்படுவார்களா இல்லையா என்று அறிவிக்குமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுக்காது உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
மனுவில் பிரதிவாதிகளாக ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
இலங்கையில் நடத்தப்படும் போர் குற்றம் தொடர்பான விசாரணைகளுக்காக வெளிநாட்டு நீதிபதிகளை வரவழைக்க அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளதாக குணதாச அமரசேகர தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சுமந்திரன் வெளியிட்ட தகவலை அரசாங்கம் இன்னும் நிராகரிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது அடிப்படை எதிர்ப்பை முன்வைத்த அரச சட்டத்தரணி, தகவல் அறியும் சட்டம் இன்னும் சரியான முறையில் அமுல்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், இந்த சட்டத்தின் கீழ் இப்படியான கோரிக்கைகளை முன்வைக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில் முன்வைக்கப்பட்ட வாதங்களை கவனத்தில் கொண்ட பிரதம நீதியரசர் தலைமையிலான மூவர் அடங்கிய அமர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.