போர்க்குற்ற விசாரணைகளுக்கு அவகாசம் கோரவுள்ள அரசாங்கம்
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள தொடர்ந்தும் அவகாசம் கோரும் நிலைப்பாட்டில் அரசாங்கம் இருப்பதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் தடைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளும் உத்தியாக இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அரசாங்கம் சர்வதேசத்தின் முன் இணக்கம் தெரிவித்திருந்தது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மனித உரிமைகள் ஆணையத்தின் பொதுக்கூட்டத்தின் போது இலங்கை அரசாங்கத்துக்கு ஒரு வருடகாலம் அவகாசம் வழங்கப்பட்டது.
எனினும் இதுவரை போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான பொறிமுறைகள் எதனையும் உருவாக்காத அரசாங்கம், எதிர்வரும் மார்ச் மாத அமர்வின் போது குறித்த விசாரணைகளை மேற்கொள்ள தொடர்ந்தும் கால அவகாசம் ஒன்றைக் கோரும் முடிவில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.