போரின் போது, அங்காங்கே சில குற்றச்செயல்கள் இடம்பெற்றன என்று இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச ஏற்றுக் கொண்டுள்ளார்.
வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களை நேற்று கோல்பேஸ் விடுதியில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அரசியலில் நுழைவதற்கு விரும்பாவிடினும், நாட்டுக்குச் சேவையாற்றும் வாய்ப்பை நிராகரிக்கமாட்டேன்.
நான் ஒரு நல்ல அரசியல்வாதியாக இருப்பேன் என்பது நிச்சயமில்லை. ஆனால், அரசியலை நான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி எப்போதும் கூறுவார்.
எனது கொள்கைக்கு இணக்கமான ஒரு தலைவரை ஆதரிக்கத் தயாராக இருக்கிறேன். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அரசியல் பிரவேசத்தை ஒரு உதாரணமாக எடுத்து, அவரது முறைமைகளை ஆராய்ந்து வருகிறேன்.
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு புதிய விசாரணைப் பொறிமுறைகள் தேவையில்லை. தற்போதுள்ள நீதிப் பொறிமுறைகளே போதுமானது.
போரின் போது தனித்தனியான சில குற்றவியல் சம்பவங்கள் இடம்பெற்றன என்பதை நான் நிராகரிக்கவில்லை. ஆனால், முழு இராணுவத்தையும் குற்றம்சாட்டுவது நியாயமானதல்ல.
எனது கட்டுப்பாட்டில் இருந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த குழுவொன்று ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்த குற்றச்சாட்டு தவறானது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவு அவ்வாறு செயற்பட்டிருந்தால், அப்போதைய இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவே அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவு தனது கட்டுப்பாட்டில் இருக்கவில்லை என்று அவரால் எப்படிக் கூற முடியும்? இது ஒரு நகைச் சுவை. என்றும் அவர் கூறியுள்ளார்.