உள்ளூர் கிரிக்கெட் போட்டியின்போது ரசிகர் ஒருவரை வங்கதேச கிரிக்கெட் வீரர் சபீர் ரஹ்மான் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது.
ராஜ்சாஹி டிவிஷன் மற்றும் டாக்கா மெட்ரோ போலீஸ் அணிகள் இடையிலான வங்கதேச தேசிய கிரிக்கெட் லீக் போட்டிகள் கடந்த வாரம் நடைபெற்றன. அந்தப் போட்டியின்போது, சபீர் ரஹ்மானை இளம் ரசிகர் ஒருவர் விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பெவிலியன் திரும்புவதாக களநடுவரிடம் அனுமதி பெற்ற சபீர், களத்துக்கு வெளியில் இருந்த அந்த இளம் ரசிகரைக் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தை களத்துக்கு வெளியில் நின்றிருந்த மாற்று நடுவர் நேரில் பார்த்து, மேட்ச் ரெஃப்ரியிடம் புகார் அளித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து மேட்ச் ரெஃப்ரி சௌகதூர் ரஹ்மான் விசாரித்த போது, அவரிடமும் சபீர் ரஹ்மான் மரியாதை குறைவாக நடந்துகொண்டதாகத் தெரிகிறது. இந்தச் சம்பவம் குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் சௌகதூர் ரஹ்மான் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரித்து வரும் வங்கதேச கிரிக்கெட் வாரியம், சபீர் ரஹ்மான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவிருப்பதாகத் தெரிகிறது. அண்மையில் முடிந்த பி.பி.எல். தொடரில் ஸைல்ஹெட் சிக்ஸர்ஸ் அணிக்காக விளையாடிய சபீர் ரஹ்மான், கோமிலா விக்டோரியன்ஸ் அணிக்கெதிரான போட்டியின்போது கள நடுவரிடம் மோசமாக நடந்துகொண்டதாக போட்டி ஊதியத்தில் பாதித்தொகை அபராதமாக விதிக்கப்பட்டது. மேலும், ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியின்போது அவர் சர்ச்சையில் சிக்கினார்.