பொன்.ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீசியது யார்? விவரம் இதோ
டெல்லியில் மரணமடைந்த ஜே.என்.யூ மாணவர் முத்துக்கிருஷ்ணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளளது.
முத்துக்கிருஷ்ணனின் உடல் சொந்த ஊரான சேலம் மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்கு வைத்த பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.
அவர் உடலுக்கு ஏரளமானவர்கள் அஞ்சலி செலுத்தினர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
அப்போது திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ அமைப்பினர் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் பேசிக்கொண்டிருக்கும்போது ஒருவர் அவரை நோக்கி காலணியை கொண்டு எறிந்தார். உடனே சம்பவயிடத்திலிருந்த பொலிசார் குறித்த நபரை கைது செய்தனர்.
இந்நிலையில் செருப்பு வீசியவர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் எனும் கிராமத்தைச் சேர்ந்த சாலமன் என்பது தெரியவந்துள்ளது. இந்திய மக்கள் முன்னணி என்ற கட்சியில் பொறுப்பாளராக இருக்கும் சாலமன் பானு என்ற திருநங்கையைத் திருமணம் செய்து கொண்டவர்.
இச்சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது, தீவிரவாதம் வளர்ந்து வருவதாகவும், தன்னை நோக்கி காலணி வீசப்படவில்லை என்றும் வானத்தை நோக்கி வீசப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், செருப்பு வீசிய மாணவருக்கு புதிய செருப்பு வாங்கித்தர வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.