வளர்ப்பு மகள் உயிரிழந்ததை தொடர்ந்து, இந்திய வம்சாவளி தம்பதி, தங்களுக்கு பிறந்த குழந்தையை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது; பெற்றோர் உரிமையையும், அவர்கள் இழக்க உள்ளனர். அமெரிக்காவின், டெல்லாசைச் சேர்ந்த, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, வெஸ்லி மேத்யூஸ், சினி மேத்யூஸ் தம்பதியின் வளர்ப்பு மகள், ஷெரின், 3, மர்மமான முறையில் இறந்தாள்.
இந்தியாவில் இருந்து தத்து எடுக்கப்பட்ட ஷெரீன், அக்., 7ல் காணாமல் போனாள். அக்., 22ல், அருகில் உள்ள சிறு பாலத்தின் கீழ், அவளுடைய உடல் மீட்கப்பட்டது.
சிறுமியின் உடலை பரிசோதித்த டாக்டர்கள், சித்ரவதை செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளனர். இதற்கிடையே, வெஸ்லி மற்றும் சினி கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அமெரிக்காவின் குழந்தை பாதுகாப்பு சேவை சட்டத்தில், வளர்ப்பு குழந்தையை முறையாக பராமரிக்காததால், தங்களுக்கு பிறந்த குழந்தையை பார்ப்பதற்கு, அவர்களுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அவர்களுக்கு பிறந்த மூன்று வயது பெண் குழந்தை, உறவினர்களின் பராமரிப்பில் உள்ளது. அந்த குழந்தையின் பெற்றோர் என்ற உரிமையை பறிக்கும் வழக்கு, 2018ல் துவங்க உள்ளது.