ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கும் போது துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஆய்வாளர் பெரியபாண்டியனை உடன் சென்ற காவலர் முனிசேகர் தவறுதலாக சுட்டார் என காவல்துறை தெரிவிதுள்ளது.
சென்னை கொளத்தூரில் உள்ள ஒரு நகைக்கடையில் கொள்ளையடித்தவர்கள் பிடிக்க மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இது தொடர்பாக 4 பேரை கைது செய்த காவலர்கள், முக்கிய குற்றவாளிகளான தினேஷ் சவுத்ரி, நாதுராம் ஆகியோர் ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் உள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து அங்கு சென்று கடந்து 13 ஆம் தேதி அதிகாலை கொள்ளையர்கள் இருந்த இடத்தை சுற்றி வளைத்தனர். அப்போது கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது துப்பாக்கி சூட்டில் பெரியபாண்டியன் உயிரிழந்தார். மேலும் கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர் காயமடைந்தார்.
பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்ட காவலர் தீபக் பார்கவ் வெளியிட்ட அறிக்கையில், நாதுராமை நோக்கி முனிசேகர் சுட்டபோது குறி தவறி பெரியபாண்டியன் மீது குண்டு பாய்ந்ததில் பெரிய பாண்டியன் உயிரிழந்தார் என கூறப்பட்டிருந்தது. மேலும் அஜாக்கிரதையாக இருந்து உயிரிழப்பு ஏற்படுத்தியதாக சென்னை கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் காவலர்கள் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், ஆய்வாளர் பெரியபாண்டியனை சுட்டது முனிசேகர் தான். அவரை காப்பாற்ற முயன்ற போது முனிசேகர் தவறுதலாக சுட்டார். அதில் தான் பெரியபாண்டியன் உயிரிழந்தார். விசாரணைக்கு பின் முனிசேகர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.