பூமியானது செயற்கை ஒளியால் பெரிதும் மாசடைந்து வருவதாகவும் இதனால் தாவரங்கள், நுண்ணுயிர்கள் மற்றும் இரவில் நடமாடும் விலங்குகள் என்பன கடும் பாதிப்பை எதிர்கொண்டு வருவதாகவும் ஜேர்மனிய விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
வீதிக் கம்பங்களிலும் கட்டடங்களிலும் கார்கள் உள்ளடங்கலான வாகனங்களிலுமிருந்து வெளிப்படும் செயற்கை ஒளியானது உயிரினங்களினதும் விலங்குகளினதும் உயிரியல் செயற்பாடுகளுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய பொட்ஸ்டாம் பிராந்தியத்திலுள்ள ஜி.எப்.இஸட். ஜேர்மன் பூகர்ப்பவியல் ஆய்வு நிலையத்தைச் சேர்ந்த கலாநிதி கிறிஸ்தோப்பர் கைபா கூறினார். செயற்கை ஒளியால் உலகெங்கும் பல பிராந்தியங்களில் இரவு நேர இருள் சூழ்நிலை இழக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
2012 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் செய்மதியிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா மற்றும் யேமன் ஆகிய நகர்களில் மட்டுமே குறைந்தளவான ஒளி மாசாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அமெரிக்கா, பிரித்தானியா, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அளவுக்கதிகமான செயற்கை ஒளி அவதானிக்கப்பட்டது.
ஒளி மாசாக்கத்தின் அளவானது தென் அமெரிக்கா, ஆபிரிக்கா மற்றும் ஆசியா ஆகிய நாடுகளில் அதி வேகமாக அதிகரித்து வருவது மேற்படி செய்மதி புகைப்படங்கள் மூலம் அறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒளி மாசாக்கத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பிராந்தியமாக வட அமெரிக்காவுள்ளது. அங்கு டெற்ரோயிட், ரொரன்டோ, நியூயோர்க், போஸ்டன் உள்ளடங்கலான நகர்கள் ஒளி மாசாக்கத்திற்கு பெரிதும் பங்களிப்புச் செய்து வருவனவாக உள்ளதாக கூறப்படுகிறது.