புதிய தீர்மானத்தை அமுல்படுத்த 362,000 டொலர்கள் தேவை
இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் புதிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்த 362,000 டொலர்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்ட தொடர் அண்மையில் ஜெனிவாவில் இடம்பெற்ற நிலையில், இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் கடந்த 23ஆம் திகதி நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதிய தீர்மானத்தின்படி, 2015ஆம் ஆண்டு மனித உரிமைகள் கூட்ட தொடரில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த மேலும் 2 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய தீர்மானத்திற்கு அமைவாக 2019ஆம் ஆண்டு வரையிலும், இலங்கையில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக மனித உரிமைகள் பேரவையின் செயலகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த கண்காணிப்பு பணிகளுக்காக 14 நாட்களை கொண்ட ஆறு பயணங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும், அந்த செயலகம் கூறியுள்ளது.
இதேவேளை, ஜெனிவா தீர்மானத்தின் பரிந்துரைகளை அமுல்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் எழுத்துமூல அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டும்.
இது குறித்த அறிக்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37வது கூட்டத்தொடரிலும், விரிவான அறிக்கையை 40ஆவது கூட்டத்தொடரிலும், சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.