புதிய அரசியலமைப்பு சட்டம் தொடர்பில் அரசாங்கத்திற்குள் பிளவு
புதிய அரசியலமைப்புச்சட்டத்தை உருவாக்குவது மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பில் அரசாங்கத்திற்குள் பிளவு ஏற்பட்டுள்ளது.
அதிகாரங்களை விரிவாக பரவலாக்கி, முழுமையான அரசியலமைப்புச் சட்டம் ஒன்றை உருவாக்கி அதனை நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையில் நிறைவேற்றி, சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்ற வேண்டும் என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பாலானவர்களின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.
இதற்கு தேவையான பலம் அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும் சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்காத அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்ளவே அரசாங்கத்திற்கு மக்களின் ஆணை கிடைத்துள்ளதாகவும் இதனால், அந்த மக்கள் ஆணைக்கு அமைய செயற்பட வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதியிடம் கூறியுள்ளனர்.
தற்போதைய சந்தர்ப்பத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி, அதில் தோல்வியடைந்தால், அரசாங்கத்தின் இருப்பும் பாதிக்கப்பட்டு, நல்லாட்சியின் நோக்கத்தை நிறைவேற்ற முடியாது போகும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனடிப்படையில், முழுமையான அரசியலமைப்புச்சட்டம் ஒன்றை உருவாக்குவதா அல்லது தற்போதுள்ள அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை செய்வதா என்பது குறித்து அடுத்த மாதம் தீர்மானிக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.