புதன்கிழமை அஷ்டமி என்பதால் ஜெயலலிதா உடல் செவ்வாய்க்கிழமையே அடக்கமா?
காலமான முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு 11 மணிநேரம் மட்டுமே லட்சக்கணக்கான தொண்டர்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுகிறது.
உயிரிழந்த ஒரே நாளில் அடக்கம் செய்யப்படுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார்.
ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா உடலுக்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நாளை அஷ்டமி என்பதால் இன்று செவ்வாய்கிழமை ராகுகாலம் முடிந்து உடல் அடக்கம் நடைபெறுகிறது.
அரசியல் தலைவர்களும், திரை உலக பிரபலங்களும் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தாயை இழந்த சேய் கதறுவதைப் போல லட்சக்கணக்கான தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறி வருகின்றனர்.
ஒரே நாளில் லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி விட முடியாது. தனது தலைவியை, அம்மாவை ஒரே ஒருமுறையாவது கடைசியாக பார்த்து விட மாட்டோமா என்று ஆவலில் அஞ்சலி செலுத்த திரண்டு வந்து கொண்டிருக்கின்றனர்.
இன்று செவ்வாய்க்கிழமை 3 மணியில் இருந்து 4.30 மணிக்கு ராகுகாலம் என்பதால் அதன் பின்னர் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட உள்ளது.
நாளை புதன்கிழமை நல்ல நாள்தான் என்றாலும் அஷ்டமி திதி என்பதால் இன்றே நல்லடக்கம் நடைபெற உள்ளது.
பஞ்சாங்கத்தில் உள்ள ராகுகாலத்தில் இறப்பு, உடல் அடக்கத்தை ராகுகாலத்தில் செய்ய மாட்டார்கள். எனவேதான் இன்று ராகுகாலம் முடிந்து உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
இதனால்தான் ஜெயலலிதாவின் முகத்தைக் காண தொண்டர்கள் அலைகடலென திரண்டு வந்து கொண்டுள்ளனர்.
ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகேயும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதா, இன்னும் சற்று நேரம் மட்டுமே இந்த பூமியில் தொண்டர்கள் முன் இருப்பார் என்பதால் தனது தாயைக் காண தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
ஜோதிடத்தில் அதீத நம்பிக்கை கொண்டவர் முதல்வர் ஜெயலலிதா, கடைசி தருணத்தில் கூட நல்ல நாள், திதி பார்த்து இப்புவியை விட்டு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.