பிரித்தானிய அரசாங்கம் தன் மீது தடைகளை விதித்தது ஒரு அரசியல் நாடகம் என முன்னாள் பிரிதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்கிற கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.
கல்குடா தேர்தல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
அதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த கருணா அம்மான், “நாங்கள் கூட்டமைப்பை உருவாக்கியது உலகம் முழுக்க பேசும் பொருளாக பார்க்கப்படுகின்றது.
அரசியலுக்கான நாடகம்
அண்மையில் பிரித்தானிய அரசாங்கம் கருணா அம்மானாகிய எனக்கு தடைவிதித்தது நாங்கள் என்ன பிச்சை எடுக்கப்போறோமா? இவ்வளவு நாளும் இல்லாத தடை கூட்டுச் சேர்ந்ததும் தடை விதிக்கின்றனர் இது ஒரு அரசியலுக்கான நாடகம் தான.

பிரித்தானிய அரசாங்கத்தால் நான் 2006 கைது செய்யப்பட்டு அங்கு சிறைச்சாலையில் 8 மாதங்கள் இருந்தேன், அப்படி இருந்த போது கண்டுபிடிக்காத குற்றைச்சாட்டை இப்போது தான் பிரித்தானிய அரசாங்கம் கண்டுபிடித்துள்ளது.
இப்படியான அரசாங்கம் அந்தநேரமே இவற்றை கண்டுபிடித்து கையில் விலங்கைபோட்டு கொண்டு சென்றிருக்கலாம். ஆனால், அரச மரியாதையடன் கட்டுநாயக்க விமான நிலையம் வரை என்னை பாதுகாப்புடன் கொண்டுவந்தார்கள்.
அப்படிபட்ட பிரித்தானிய அரசாங்கத்துக்கு இப்பதான் விளங்கியிருக்கிறது கருணா அம்மான் பிழை விட்டுள்ளார் என, ஆகவே இது எல்லாம் கிழக்கு தமிழர்களுடைய இருப்பை சூறையாடுவதற்கான நடவடிக்கை இதற்காக புலம் பெயர்ந்து வாழுகின்ற சில அருவருடிகள் ஒத்துழைத்துவருகின்றனர்” என்றார்.
இவ்வாறானதொரு பின்னணியில், உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜெயசூர்ய, கருணா அம்மான் ஆகியோர் மீது திங்கட்கிழமை ஐக்கிய இராச்சியம் தடைகளை விதித்த்தமை குறிப்பிடத்தக்கது.