பிரித்தானியாவில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு முன்னால் இலங்கையில் தமிழ் அரசியற்கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் இன்று 22/10/2017 மதியம் 1.00 தொடக்கம் மாலை 5.00 மணிவரை மேற்கொள்ளப்பட்டது.
இதில் பொதுமக்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டு இலங்கை அரசாங்கத்திற்கெதிரான கண்டனங்களை பதிவுசெய்தனர்.
தமிழ் அரசியற்கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய், திட்டமிட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் எங்கே இருக்கிறார்களா இல்லையா, இராணுவமே தமிழர் நிலங்களை விட்டு வெளியேறு, இலங்கை அரசு இனப்படுகொலை அரசு, ஐக்கிய நாடுகள் சபை ஏன் மவுனமாக இருக்கிறது, எம் தலைவர் பிரபாகரன், எம் நாடு தமிழீழம் போன்ற கோசங்கள் உரக்க ஒலித்தன.
தாயகத்தில் இருந்து தொலைபேசி மூலமாக இணைந்து கொண்ட காணாமல் ஆக்கப்படோரின் உறவுகளும் அரசியற்கைதிகளின் உறவுகளும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் தமது உள்ளக்குமுறல்களையும் பதிவு செய்தனர். பிரித்தானிய பிரதமருக்கு வழங்குவதற்கான மகஜரில் கையொப்பங்களும் பெறப்பட்டன.