பிரான்ஸ் தாக்குதல் சம்பவம்: அதிர்ச்சியையும் கவலையையும் பதிவு செய்த கனேடியத் தலைவர்கள்
பிரான்சில் 77 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கனேடியர்களும் கனேடிய அரசியல் தலைவர்களும் தங்களின் அதிர்ச்சியையும் கவலையையும் வெளியிட்டுள்ளனர்.
பிரான்சின் நைஸ் நகரில் நேற்று வியாழக்கிழமை மக்கள் கூட்டம் அதிகம் இருந்த இடம் ஒன்றினுள் கனரக வாகனம் ஒன்று நுளைந்து அங்கிருந்தவர்களை மோதியதில் குறைந்தது 77 பேர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமுற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரான்சின் தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியின்போது இடம்பெற்ற அந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோசமான சம்பவம் இடம்பெற்றதை அடுத்து கனேடியப் பிரதமர் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளதுடன், பிரான்சிற்கு ஆதரவாக கனடா இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் முதல்வர் Christy Clarkஉம் தமது டுவிட்டர் பக்கத்தில் அனுதாபம் தெரிவித்துள்ளதுடன், இது ஒரு பயங்கரமான சம்பவம் என்றும் வர்ணித்துள்ளார்.
அவ்வாறே கனடாவின் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், கட்சித் தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் இந்த சம்பவம் தொடர்பில் தங்களின் அதிர்ச்சியையும் கவலைகளையும் வெளியிட்டுள்ளனர்.
பிரான்சின் தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நேற்று இடம்பெற்றுக்கொண்டிருந்த தருணத்தில் , நைஸ் மாகாணத்தின் முக்கிய சாலையில் சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று, திடீரென ஒரமாக நின்று கொண்டிருந்த மக்களை மோதியவாறு சென்றதாக கூறப்படுகிறது.
அந்த வாகனம் சாலையோரமாக சுமார் 2 கிலோமீட்டர் தூரம் பயணித்ததாகவும், அதில் ஏராளமான மக்கள் சிக்கி நசுங்கிய நிலையில், கனரக வாகனத்தின் ஓட்டுநரை காவல்த்துறையினர் சுட்டுக் கொன்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை அந்த கனரக வாகனத்தில் ஆயுதங்கள், கையெறி குண்டுகள் இருந்ததாக நைஸ் மாகாண தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தீவிரமான விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1,291 total views, 1,031 views today
– See more at: http://www.canadamirror.com/canada/66009.html#sthash.4gK0lKeL.dpuf