பிரபாகரனை காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்த அமெரிக்கா! நிராகரித்த இலங்கை, தமிழக தமிழ் தலைவர்கள்..
இறுதி யுத்தத்தின்போது, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை இலங்கையிலிருந்து வெளியேற்ற இலங்கை மற்றும் தமிழ்நாட்டிலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் விரும்பவில்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேன்னால் வெளியிடப்பட்ட புத்தகமொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளாக அமைச்சர் சம்பிக்க கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர்,
இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேன் புத்தகமொன்றை அண்மையில் வெளியிட்டிருந்தார்.
பிரபாகரன் உள்ளிட்ட 47 பேரை இலங்கையிலிருந்து வெளியேற்ற இடமளிக்குமாறு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளதாக சிவ்சங்கர் மேனன் இந்திய மத்திய காங்கிரஸ் அரசாங்கத்திடமும், தமிழக அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இதற்கு இலங்கை அரசாங்கம் இணங்கவில்லை. இலங்கை இராணுவத்தினர் பிரபாகரனை சுற்றிவளைத்துள்ளனர்.
இந்த நிலையில், உங்கள் நிலைப்பாடு என்ன? என தமிழக மற்றும் இலங்கை தமிழ் அரசியல் தலைவர்களிடம் சிவ்சங்கர் மேனன் கேட்டுள்ளார்.
ஆனால், பிரபாகரனை அனுப்ப வேண்டாம் என்பதே தமிழக அரசியல்வாதிகளினதும், இலங்கையிலுள்ள தமிழ் அரசியல் வாதிகளினதும் அப்போதைய கோரிக்கையாக இருந்ததாக இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனை மேற்கோள்காட்டி அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.