பிரதமர் நரேந்திர மோடியை தரம் தாழ்ந்து விமர்சித்ததாக காங்கிரஸ் மூத்தத் தலைவர் மணிசங்கர் ஐயர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். பிரதமரை இழிவான மனிதர் என்று மணிசங்கர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மன்னிப்பு கோருமாறு கேட்டுக் கொண்டதையடுத்து தம்முடைய பேச்சிற்கு மணிசங்கர் ஐயர் மன்னிப்பு கோரியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் மணிசங்கர் ஐயர் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்திருந்தார். பிரதமர் தரம் தாழ்ந்த அரசியல் செய்வதாகவும், அவர் ஒரு இழிவான மனிதர் (நீச் ஆத்மி) என்றும் கூறி இருந்தார் மணிசங்கர் ஐயர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜஹாங்கீருக்கு பின் ஷாஜகான்தான் என்பது அனைவருக்கும் தெரியும் என காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கூறியதை கிண்டல் செய்து பேசினார். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்துள்ளதன் மூலம் அக்கட்சி வாரிசு அரசியலை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
பிரதமரின் இந்த கருத்தை குறிப்பிட்டு இன்று கருத்து தெரிவித்த மணிசங்கர் ஐயர், பிரதமர் தரம் தாழ்ந்த அரசியலைச் செய்கிறார். அவர் ஒரு இழிவான மனிதர் என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார். மணிசங்கர் ஐயர் சொன்ன நீச் ஆத்மி என்ற வார்த்தை தேசிய அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதனையடுத்து மணிசங்கர் ஐயரின் கருத்தை காங்கிரஸ் ஏற்கவில்லை என்று அந்தக் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். பாஜக காங்கிரஸ் கட்சியை தரம் தாழ்ந்த வார்த்தைகளால் விமர்சித்து வந்தாலும் பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சி அதனை ஆதரிக்காது என்று ராகுல் காந்தி டுவீட்டியுள்ளார். மேலும் மணிசங்கர் ஐயர் தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கோருவார் என்று நம்புவதாகவும் ராகுல்காந்தி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மணிசங்கர் ஐயர் தன்னுடைய தாய்மொழி இந்தி இல்லை என்பதால் நீச் என்ற வார்த்தை தவறான அர்த்தத்தில் சொல்லப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். பிரதமரை இழிகுலத்தில் பிறந்தவர் என்ற கருத்துடன் தான் அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை என்றும் மணிசங்கர் ஐயர் விளக்கம் அளித்துள்ளார். தவறான அர்த்தத்தில் நீச் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை என்றும் மணிசங்கர் ஐயர் மன்னிப்பு கோரியுள்ளார்.
மணிசங்கர் ஐயரின் இந்த கருத்துக்கும் பிரதமர் நரேந்திர மோடி பதிலடி கொடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியினர் தம்மை தாழ்ந்தவர் என விமர்சிப்பது குறித்து கவலைப்படவில்லை என்றும், மக்களுக்காக தாம் ஆற்றும் பணி உயர்ந்தது என்றும் மோடி கூறியுள்ளார்.
மணிசங்கர் ஐயர் பிரதமர் நரேந்திர மோடி இதற்கு முன்னர் கூறிய சில கருத்துகளும் சர்ச்சையை ஏற்படுத்தின. கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியை டீக்கடைக்காரர் என்று கூறி சர்ச்சையில் சிக்கியவர் மணிசங்கர் ஐயர் என்பது குறிப்பிடத்தக்கது.