கனிஷ்ட தேசிய மெய்வல்லநர் சம்பியன்ஷிப் போட்டி ஒன்றில் நாவலப்பிட்டி, ஸ்ரீ கதிரேசன் கல்லூரிக்கு முதலாவது பதக்கத்தை வென்று கொடுத்தவர் என்ற வரலாற்று சாதனையை துரைசிங்கம் சுஜீவன் படைத்துள்ளார்.
மெய்வல்லுநர் விளையாட்டுத்துறையில் சற்று கடினமான போட்டிகளில் ஒன்றான சட்டவேலி ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய முதல் சந்தர்ப்பத்திலேயே 15 வயதுடைய சுஜீவன் பதக்கம் ஒன்றை வென்றது பாராட்டுக்குரிய விடயமாகும்.
அவரது காலணி பிய்ந்திருந்த போதிலும் அவரது விடாமுயற்சியும் மனோதிடமும் இந்த வெற்றியை அவருக்கு ஈட்டிக்கொடுத்தது.
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்ற கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் 16 வயதுக்குட்பட்ட சட்டவேலி ஓட்டப் போட்டியை 14.69 செக்கன்களில் நிறைவு செய்து மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றதன் மூலமே 15 வயதான சுஜீவன், தனது கல்லூரி சார்பாக வரலாற்று சாதனையை படைத்தார்.
தகுதிகாண் சுற்றில் சுமார் 5 மீற்றர் தூரம் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சுஜீவன், இறுதிப் போட்டியில் மிக இலகுவாக வெற்றிபெற்று தங்கப் பதக்ததை வென்றெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் நாவலப்பிட்டியில் வெறும் புல்தரையில் பயிற்சியில் ஈடுபட்டுவரும் சுஜீவன், செயற்கைத் தள ஓடுபாதையில் முதல் தடவையாக பங்குபற்றியதாலும் பிய்ந்துபோன காலணிகளுடன் ஓடியதாலும் மூன்றாம் இடத்தைப் பெற நேரிட்டது.
ஆனால், அவர் ஓடும் விதம், சட்டவேலிகளைத் தாண்டும் விதம் அனைத்தும் சிறந்த நுட்பத்திறனுடன் இருந்ததை அவதானிக்க முடிந்தது.
16 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டியில் 3ஆம் இடத்தைப் பெற்ற சுஜீவன் 16, 18, 20, 23 ஆகிய நான்கு வயது பிரிவுகளிலும் பதிவு செய்யப்பட்ட நேரப் பெறுதிகளின் பிரகாரம் ஒட்டுமொத்த நிலையில் 4ஆம் இடத்தில் இருந்தார்.
16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சட்டவேலி ஓட்டப் போட்டியில் கந்தானை புனித செபஸ்தியார் மாணவன் துஷார லக்ஷான் (14.58 செக்.), காலி வித்யாலோக்க மாணவன் அனூஜ அருணோத (14.64), 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான சட்டவேலி ஓட்டப் போட்டியில் கொழும்பு றோயல் மாணவன் நதுன் பண்டார (14.24) ஆகியோரே சுஜீவனை விட சிறந்த நேரப் பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
இத்தகைய திறமையைக் கொண்டுள்ள சுஜீவன், பிய்ந்துபோன காலணிகளுடன் சுகததாச அரங்கில் போட்டியிட்டு வெண்கலப் பதக்கதை வென்றது ஆச்சரியத்தை தருவதாக அமைந்தது.
இந்த பெறுபேறுகளின் அடிப்படையில் சுஜீவன் இதனைவிட சிறந்த ஆற்றலை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பகின்றது.
‘தரம்வாய்ந்த காலணிகளை வாங்குவதற்கு வசதி போதாததால் பிய்ந்துபோன காலணியுடன் போட்டியில் பங்குபற்ற நேரிட்டது. தரம்வாய்ந்த காலணிகள் கிடைத்தால் இதனைவிட திறமையான ஆற்றல்களை வெளிப்படுத்தி என்னால் சாதிக்க முடியும் என நம்புகின்றேன்’ என சுஜுவன் குறிப்பிட்டார்.
அவரது வெற்றி குறித்து கருத்து வெளியிட்ட கல்லூரி அதிபர் ரி. நாகராஜ், ‘ஸ்ரீ கதிரேசன் கல்லூரி விளையாட்டுத்துறை வரலாற்றில் இது ஒரு மைல் கல் சாதனை’ என புகழ்ந்தார்.
11 வயதில் 6ஆம் வகுப்பு கற்றுக்கொண்டிருந்தபோது 100 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் நீளம் பாய்தலிலும் வலய மட்டப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற்ற சுஜீவன், 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் மாவட்ட மட்டத்தில் 2ஆம் இடத்தையும் மாகாண மட்டத்தில் 4ஆம் இடத்தையும் பெற்றார்.
சுஜீவனிடம் திறமை இருப்பதை முதலில் இனங்கண்ட கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் கருணாஹரன் அவருக்கு சீரிய பயிற்சிகளை வழங்கிவந்தார்.
தற்போது நாவலப்பிட்டி விளையாட்டுக் கழக பயிற்றுநர் அசங்க ரட்நாயக்கவிடம் பிரத்தியேக பயிற்சிகளில் சுஜீவன் ஈடுபட்டுவருகிறார்.
சுஜீவனின் உடல்வாகு சட்டவேலி ஓட்டத்துக்கு மிகவும் பொறுத்தமாக இருப்பதை அவதானித்த அசங்க ரட்நாயக்க, கடந்த வருடத்திலிருந்து சுஜீவனுக்கு சட்டவேலி ஓட்டப் பயிற்சிகளை வழங்கிவருகிறார். பயிற்றுநரின் அந்தத் தீர்மானம்தான் சுஜுவனுக்கு இப்போது பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளது.
இந்த ஒரு வருட காலத்தில் இவ்வளவு பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ள சுஜீவன், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள சேர் ஜோன் டாபட் மெய்வல்லுநர் போட்டியில் தங்கம் பதக்கத்தை வென்றெடுப்பதே தனது குறிக்கோள் என வீரகேசரிக்கு தெரிவித்தார்.
தனியார் நிறுவனம் ஒன்றில் முகவராக கடமையாற்றும் தனது தந்தை (வீ. துரைசிங்கம்) குடும்பத் தலைவியான தனது தாயார் (கே. ஸ்ரீதேவி துரைசிங்கம்) ஆகிய இருவரும் தன்னை ஊக்குவித்து வருவதாக குறிப்பிட்ட அவர், கல்லூரி அதிபர், பாடசாலை உடற்கல்வி ஆசிரியர், பயிற்றுநர் ஆகியோருக்கு நன்றி உடையவனாக இருப்பதாகவும் கூறினார்.