அறிமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக முன்னணி வேடத்தில் நடித்திருக்கும் ‘பயமறியா பிரம்மை’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முத்திரை பதித்த படைப்பாளி பா. ரஞ்சித் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பயமறியா பிரம்மை’ எனும் திரைப்படத்தில் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நந்தா மற்றும் வி. பிரவீண் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் கே இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை 69 எம்எம் ஃபிலிம் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெகதீஷ் மற்றும் இயக்குநர் ராகுல் கபாலி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் படத்தில் நடித்திருக்கும் கலைஞர்களின் தோற்றம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனிடையே இந்த திரைப்படம் அண்மையில் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் திரையுலக ஆர்வலர்களால் பெரும் பாராட்டைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.