‘வைகைப்புயல்’ வடிவேலு – இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி ஆகிய இருவரும் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘கேங்கர்ஸ்’ எனும் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் கொமர்ஷல் அம்சங்கள் இந்த ட்ரெய்லரில் இடம் பிடித்திருப்பதால் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கேங்கர்ஸ்’ எனும் திரைப்படத்தில் சுந்தர் சி இவடிவேலு, கேத்ரின் தெரசா, வாணி போஜன், மைம் கோபி, பக்ஸ் பகவதி பெருமாள், முனீஸ் காந்த், அருள் தாஸ், முத்துக்குமார், சந்தான பாரதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஈ.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சி சத்யா இசையமைத்திருக்கிறார். கொமர்ஷல் என்டர்டெய்னராக தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏசிஎஸ் அருண்குமார் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 24ஆம் திகதியன்று உலகம் முழுவதிலுமுள்ள திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் சிங்காரம் எனும் கதாபாத்திரத்தில் பாடசாலையில் பயிலும் மாணவர்களுக்கு உடற்கல்வி ஆசிரியராக வடிவேலு தோன்ற, அதே பாடசாலையில் சுந்தர்.சி தகுதியான உடற்கல்வி ஆசிரியராக சேர்கிறார்.
சட்டத்திற்கு விரோதமாக சேர்த்து வைத்திருக்கும் பணத்தை இவர்கள் இருவரின் தலைமையிலான குழுவினர் எப்படி கைப்பற்றுகிறார்கள் என்பதை நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு அம்சத்துடன் இப் படம் தயாராகியிருக்கிறது என தெரிய வருவதால் ரசிகர்களிடம் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.