ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று (18) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
அலரி மாளிகையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தேர்தலின் பின்னரான அரசியல் நெருக்கடி தொடர்பில் இதன் போது விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேசிய அரசாங்கத்திலிருந்து விலகினால், பெரும்பான்மைப் பலத்தை பாராளுமன்றத்தில் காட்டுவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளைய தினம் பாராளுமன்றம் கூடவுள்ளது. இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்கவேண்டிய நிலை ஏற்படும் எனவும் அரசியல் அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.