பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காத வரை நிலையான சமாதானத்தை எட்ட முடியாது !
இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற இனநெருக்கடி, யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காத வரை நிலையான சமாதானத்தை எட்ட முடியாது என ஐ. நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் செயிட் அல் ஹுசைன் தெரிவித்திருக்கிறார்.
நீதிச் செயற்பாடுகளில் பக்கச் சார்பற்ற சட்டமுறைமை தொடர்பில் நம்பிக்கையீனம் காணப்படுவதால் தொடர்ந்தும் சர்வதேசத்தின் பங்களிப்பு தேவையென்பது உணர்த்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
சில விடயங்களில் ஆரோக்கியமான போக்கு காணப்பட்டாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவை முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை எனவும் இதுவே சர்வதேசப் பங்களிப்பை தொடர வேண்டுமென்ற நிலைமையை தோற்றுவித்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஜெனீவாவில் ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் 34வது அமர்வில் இலங்கை விவகாரம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பித்து உரையாற்றிய உயர்ஸ்தானிகர் செய்யத் அல் ஹுசைன், பரவலான பல்வேறுபட்ட அம்சங்களையும் உள்வாங்கி தனது அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறார்.
அனைத்து விடயங்களையும் வெளிப்படைத் தன்மையுடன் பேசியிருக்கும் அவர், இலங்கை உரிய காலப் பகுதிக்குள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கக் கூடிய விதத்தில் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கின்றார்.
மனித உரிமைகள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு உட்பட முக்கிய சில விடயங்களில் அதிகமான சமிக்ஞைகள் வெளிப்படுத்தப்பட்டிருப்பதானது வரவேற்கப்படக் கூடியதெனவும் இலங்கை அரசாங்கம் தனது அலுவலகத்துடன் கொண்டிருக்கும் ஈடுபாட்டை மதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.
செயிட் அல் ஹுசைனின் உரையும், அவர் சமர்ப்பித்திருக்கும் அறிக்கையும் இலங்கை மீதான கடும் போக்கை தளர்த்தக் கூடியதாகவும், நெகிழ்வு போக்கை கொண்டதாகவும் அமைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.
கடந்த இரண்டு வருட காலத்துக்கிடையில் நல்லாட்சி அரசின் செயற்பாடுகள் நம்பிக்கையளிப்பதாக மறைமுகமாக அவர் சுட்டிக்காட்டி இருப்பதாகவே உணர முடிகிறது.
இதேவேளை காணிகளை விடுவிக்கும் செயற்பாடுகளில் அரசு மந்த நிலையில் செயற்படுவதைக் குறிப்பிட்டுக்காட்டி அதனை வெளிப்படைத்தன்மையுடன் துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தனதுரையில் வலியுறுத்தி இருக்கின்றார்.
மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான செயற்பாடுகள் விரைவுபடுத்தப்பட வேண்டியதன் தேவைப்பாட்டை ஆழமாக கவனத்தில் கொள்ளுமாறும் அவர் கோரியிருக்கின்றார். இவை குறித்து அவர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவை உருவாகியுள்ளது.
நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான கருத்தறியும் செயலணியின் செயற்பாடுகள் குறித்து குறிப்பிட்டிருக்கும் உயர்ஸ்தானிகர் அது சமர்ப்பித்திருக்கும் அறிக்கையை காணப்படும் பயனுள்ள விடயங்களை உள்ளீர்த்துச் செயற்படுமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார்.
30/1 பிரேரணையில் அடையாளம் காணப்பட்ட இடைக்கால நீதி தொடர்பான விடயங்கள் பற்றிய விரிவான திட்டம், காலக்கெடு, விரிவான வரையறை போன்றவை குறித்து இணக்கப்பாடு எட்டப்பட வேண்டியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் அமைக்கப்பட வேண்டும். இது தொடர்பில் சர்வதேச சட்டவிதிகள் இலங்கையில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதை அவர் வலியுறுத்தியுள்ளார்.
சுயாதீன ஆணைக் குழுக்களுடன் ஆலோசனை மேற்கொண்டு பரிந்துரைகளைப் பெற்றுச் செயற்பட வேண்டுமெனவும் அவற்றின் நிகழ்ச்சித் நிரலுக்கு மதிப்பளிப்பதன் மூலம் நல்லாட்சியை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அவ்வாறானதொரு சூழ்நிலையில் தேவையான நிதி உதவிகளை பெற்றுக் கொள்வதற்கு எம்மால் ஊக்குவிக்கக் கூடியதாக இருக்கும் என்ற நல்ல சமிக்ஞையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகிறது.
இதேவேளை கலப்பு நீதிமன்றத்தை அரசாங்கம் அமைக்கும் உத்தேசம் எதுவுமில்லையெனத் தெரிவித்திருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நீதிமன்றில் இணையப் போவதில்லை எனவும் அரசியலமைப்புக்கு முரணாக சர்வதேச நீதிபதிகளை விசாரணைகளுக்காக அனுமதிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.
இருந்த போதிலும் ஐ. நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் கலப்பு நீதிமன்றத்துக்கு மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.
ஆனால் அவரது கருத்து கட்டாயப்படுத்தும் தோரணையில் அமையப் பெற்றதாகக் காண முடியவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையளிக்கக் கூடியதாக அது அமைய முடியும் என்பதையே அவர் இதன் மூலம் குறிப்பிட்டுக்காட்டியிருக்கிறார்.
இது இவ்விதமிருக்க 2015 நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் காணப்படும் விடயங்களை நடைமுறைப்படுத்த இரண்டு வருட கால அவகாசம் வழங்குவது குறித்து ஐ. நா. மனித உரிமைகள் பேரவை சாதகமான முறையில் அணுகி இருப்பது குறித்து நன்றி தெரிவித்துள்ள அரசாங்கம், இந்த உரிமைகள் உயர் ஆணையாளருடனும் அதன் அலுவலகத்துடனும் நெருக்கமாக பணியாற்றுவதாகவும் அதேசமயம் சகல மக்களதும் நலன்களுக்காக ஆக்கபூர்வமான, அர்த்தம் பொதிந்த பணியில் ஈடுபாடு காட்டி வருவதாகவும் இலங்கை தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
உண்மையிலேயே ஜெனீவாவில் இடம்பெற்ற ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கை குறித்த 31 வது அமர்வு இலங்கை விடயத்தில் பல்வேறுபட்ட சாதகமான சமிக்ஞைகளை வெளிப்படுத்தி இருப்பதாகவே உணர முடிகிறது.
அதே சமயம் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் பேசும் அமைப்புகள், அந்த மக்களின் பிரதிநிதிகள் அரசாங்கத்தின் நெகிழ்வுப் போக்கை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.
முரண்பாடுகள் காணப்படலாம். அவற்றை உடன்பாடுகளாக மாற்றக் கூடிய விதத்தில் எமக்கிடையே ஆரோக்கியமான சிந்தனைகள் உருவாக வேண்டும்.
காலம் முழுவதிலும் எமது பிரச்சினைகள் புரையோடிப் போகும் விதத்தில் நீண்டு கொண்டு போக முடியாது. நல்ல சந்தர்ப்பம் இன்று ஏற்பட்டிருக்கின்றது. இந்த தருணத்தை எந்தத் தரப்பும் தவற விட்டு விடக் கூடாது.
சரியான தளத்தில் பயணித்து நாட்டு மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் ஏற்படுவதற்கான இணக்கப்பாட்டை எட்டுவதற்கு திடசங்கற்பம் கொள்ள வேண்டும்