பாதயாத்திரையை நடத்துவது அலிபாபாவும் 40 திருடர்களும்!
கடந்த கால மஹிந்த ஆட்சியில் ஊழல் திருட்டுக்களில் ஈடுபட்டவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காகவே பாதயாத்திரை செல்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்காக கொழும்பில் இன்று நடைபெற்ற மருத்துவ முகாம் ஒன்றில் கலந்து கொண்ட போதே எஸ்.எம். மரிக்கார் இதனைக் கூறினார்.
நாட்டு மக்களுக்கு சேவை செய்யவேண்டியவர்கள், தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இந்த பாதயாத்திரையை மேற்கொள்கின்றனர்.
இதில் கலந்து கொள்பவர்கள் அலிபாபாவும் 40 திருடர்களையும் போன்றவர்கள், நல்லவர்கள் எனக் கூறுவதற்கு இதில் எவரும் இல்லை எனவும் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
மேலும், நாட்டு மக்களின் சேவைக்காக புதிய அம்பியூலன்ஸ் வண்டிகளை நாம் நேற்று வழங்கியிருந்தோம். ஆனால் பாதயாத்திரையில் கலந்து கொள்பவர்கள் நோயாளிகளை ஏற்றிச் செல்லும் அம்பியூலன்ஸ் வண்டிகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.
இப்படியானவர்களே கடந்த காலத்தில் நாட்டை ஆட்சி செய்தனர். இவ்வாறு தீவிரவாதிகள் கூட செயற்பட்டதில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குற்றம் சுமத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.