புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கருத்து கணிப்புகளில் பாஜக கூட்டணி 350-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. மக்களவையில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதர 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
கடைசிக் கட்ட தேர்தல் நேற்று நிறைவடைந்ததைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்குப் பிறகு தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின. இதில் முன்னணி ஊடகங்கள் நடத்திய கருத்து கணிப்பு விவரங்கள் வருமாறு:
முன்னணி இந்தி நாளிதழான தைனிக் பாஸ்கர் வெளியிட்ட கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி 281-350, இண்டியா கூட்டணி 145-201, இதர கட்சிகள் 33-49 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. ரிபப்ளிக் டிவி-பிமார்க் இணைந்து நடத்திய கருத்துகணிப்பில் பாஜக கூட்டணிக்கு 359, இண்டியா கூட்டணி 154, இதர கட்சிகளுக்கு 30 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, ரிபப்ளிக் பாரத் மேட்ரிஸ், ஜன் கி பாத், நியூஸ் நேஷன், நியூஸ் எக்ஸ் மற்றும் டி-டைனமிக்ஸ், இண்டியா டிவி-சிஎன்எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்பிலும் பாஜக கூட்டணிக்கு 350-க்கும் மேற்பட்ட தொகுதிகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், மேற்குவங்கம், பிஹார், டெல்லி, சத்தீஸ்கர், அசாம், ஆந்திரா, ஒடிசா, உத்தராகண்ட், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் பாஜக முதல் முறையாக கால் பதிக்கும் என்றும் கருத்து கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மத்தியில் ஆட்சியமைக்க 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் பாஜக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும், பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக பதவியேற்பார் என்று பெரும்பாலான கருத்து கணிப்பு களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக நிலவரம்: தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணி பெருவாரியான இடங்களில் அமோக வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு. கள் தெரிவிக்கின்றன.