ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா மற்றும் பலர் நடித்து கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளிவந்த ‘பாகுபலி 2’ படம் இந்தியத் திரையுலக வரலாற்றில் பெரும் வசூல் சாதனை புரிந்தது. 1700 கோடி ரூபாய் வசூலித்ததாகச் சொல்லப்படும் படம் ஹிந்தியில் வெளிவந்த ‘தங்கல்’ படத்தின் மொத்த வசூலையும் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இதுவரை ‘பாகுபலி 2’ படத்தை சீனாவில் வெளியிட அனுமதி கிடைக்கவில்லை. ‘தங்கல்’ படம் சீனாவில் வெளியாகி அங்கு பெரும் வசூலைக் குவித்ததால்தான் அந்தப் படம் இந்தியத் திரைப்படங்களில் அதிக வசூல் பெற்ற முதல் படம் என்ற பெருமையைப் பெற்றது. ‘பாகுபலி 2’ படத்திற்கு சீனா வெளியீடு இன்னும் கிடைக்காதததால் அந்த சாதனையை இன்னும் முறியடிக்க முடியவில்லை. ‘பாகுபலி 2’ படத்தின் சீனா வெளியீடு என்பது கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலைக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.
கடந்த செப்டம்பர் மாதமே அங்கு படம் வெளியாகும் என்றார்கள். மூன்று மாதங்கள் முடிவடைய உள்ள நிலையில் அதற்கான அறிகுறி தெரியவில்லை. அதனால் தற்போது ‘பாகுபலி 2’ படத்தை ஜப்பான், ரஷ்யா ஆகிய நாடுகளில் வெளியிட உள்ளார்கள். வரும் 29ம் தேதியன்று ஜப்பான் நாட்டிலும் 2018ம் ஆண்டு துவக்கத்தில் ரஷ்யாவிலும் படத்தை வெளியிடுகிறார்கள்.
ரஜினிகாந்த் நடித்த ‘முத்து’ படத்திற்குப் பிறகு ஜப்பான் நாட்டில் வேறு எந்த இந்தியப் படமும் பெரிய வரவேற்பைப் பெற்றதில்லை. அந்த பெருமையை ‘பாகுபலி 2’ முறியடிக்குமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.