கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (12) மாலை நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் 10 வீரர்களாக மட்டுப்படுத்தப்பட்ட மொரகஸ்முல்லை அணியிடம் கடைசி நேரத்தில் பலத்த சவாலை எதிர்கொண்ட கொம்பனித் தெரு ஜாவா லேன் கழகம் ஒருவாறு 2 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த சுற்றுப் போட்டியில் ஜாவா லேன் கழகம் ஈட்டிய இரண்டாவது வெற்றி இதுவாகும்.
அளவுக்கு அதிகமாக ஓவ்சைட் வலையில் சிக்கியமை, ஏகப்பட்ட கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டமை காரணமாகவே ஜாவா லேன் கழகம் எதிரணியிடம் சவாலை எதிர்கொள்ள நேரிட்டது.
போட்டி ஆரம்பித்து 3ஆவது நிமிடத்தில் ஜாவா லேன் முதலாவதாக கோல் போட்டு முன்னிலை அடைந்தது.
சுமார் 35 யார் தூரத்திலிருந்து அணித் தலைவர் மொஹமத் அலீம் செலுத்திய ப்றீ கிக் பந்தை மொரகஸ்முல்லை கோல் எல்லையில் பெற்றுக்கொண்ட டொக்கோக்வு பிரான்சிஸ் (டீபோய்) ஓங்கி உதைத்து பந்தை கோலின் மேல் பகுதிக்குள் புகுத்தினார்.
அதன் பின்னர் ஜாவா லேன் வீரர்கள் எதிரணி கோல் எல்லையை ஆக்கிரமித்த வண்ணம் இருந்தனர். ஆனால், இடதுபுற முன்கள வீரர் நவீன் ஜுட் பல தடவைகள் ஓவ்சைட் வலையில் சிக்கியதால் பல வாய்ப்புகள் தவறவிடப்பட்டன.
போட்டியின் 12ஆவது நிமிடத்தில் இரண்டு வீரர்கள் மோதுண்டு கீழே வீழந்தபோது ஜாவா லேன் வீரர் ஒலாவேல் என்பவரை தனது முழங்கையால் தாக்கிய மொரகஸ்முல்லை வீரர் நிமல தனஞ்சய, மத்தியஸ்தர் லக்மால் வீரக்கொடியின் நேரடி சிவப்பு அட்டைக்கு இலக்காகி அரங்கை விட்டு வெளியேறினார்.
10 வீரர்களாக மட்டுப்படுத்தப்பட்ட போதிலும் எஞ்சிய 78 நிமிடங்களும் மொரகஸ்முல்லை அணி விடாமுயற்சியுடன் விளையாடியது. இதன் காரணமாக ஜாவா லேன் பலத்த சவாலை எதிர்கொண்டது.
இடைவேளையின் பின்னர் ஜாவா லேன் வீரர்கள் மொரகஸ்முல்லை கோல் எல்லையை நெருங்கிய போதிலும் அவர்களால் கோல் போட முடியாமல் போனது.
மறுபுறத்தில் மொரகஸ் முல்லை அணி கோல் நிலையை சமப்படுத்த கடுமையாக முயற்சித்த வண்ணம் இருந்தது. ஆனால், ஜாவா லேன் பின்கள வீரர்களும் கோல்காப்பாளரும் அந்த முயற்சிகளை தடுத்தவண்ணம் இருந்தனர்.
போட்டியின் கடைசிக் கட்டத்தில் ஜாவா லேன் மத்திய கள வீரர் மொஹமத் சப்ரான் மிக அலாதியாக பந்தை நகர்த்திச் சென்று ஒலாவேலுக்கு பரிமாற ஒலாவேல் அதனை கோலாக்கினார்.
நிகம்போ யூத் வெற்றி
குருநாகல், மாளிகாபிட்டி மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு சம்பியன்ஸ் லீக் போட்டியில் அநுராதபுரம் சொலிட் கழகத்தை 2 – 1 என்ற கோல்கள் கணக்கில் நிகம்போ யூத் கழகம் வெற்றிகொண்டது.
ஆரம்பம் முதல் கடைசிவரை விறுவிறுப்பை ஏற்படுத்திய அப் போட்டியில் இடைவேளையின்போது 2 அணிகளும் தலா ஒரு கோல் போட்டிருந்தன.
போட்டியின் 5ஆவது நிமிடத்தில் ப்ரதீப் பெர்னாண்டோ முதலாவது கோலை போட்டு நிகம்போ யூத்தை முன்னிலையில் இட்டார்.
ஆனால், 21ஆவது நிமிடத்தில் சொலிட் சார்பாக ஹந்துனெத்தி நிஷாந்த கோல் நிலையை சமப்படுத்தினார்.
இடைவேளை முடிந்து 65ஆவது நிமிடத்தில் நிகம்போ யூத் கழகத்தின் சிரேஷ்ட வீரர் கிறிஸ்டின் பெர்னாண்டோ போட்ட கோல் அவ்வணியின் வெற்றி கோலாக அமைந்தது.