அமெரிக்காவின் சிக்காகோ சென்ற விமானத்தில் திடீரென்று அதிர்வு ஏற்பட்டதால் 11 பயணிகள் படுகாயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தைவானின் தைபே விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் சிக்காகோ நோக்கி புறப்பட்ட போயிங் ரக விமானத்திலே இந்த திடீர் அதிர்வு ஏற்பட்டு பயணிகள் விபத்துக்குள்ளாகினர்.
விமானம் சிக்காகோ வந்திறங்கிய உடன் 8 விமான ஊழியர்கள் மற்றும் 3 பயணிகள் உள்ளிட்ட படுகாயம் அடைந்த 11 பேரை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பில் வெளியான புகைப்படங்களில் விமான ஊழியர்கள் நிலைத்தடுமாறுவதையும், உணவு உள்ளிட்ட பொருட்கள் தரையில் சிதறிக்கிடப்பதும் பதிவாகியுள்ளது.
தைபே விமான நிலையத்தில் இருந்து குறித்த விமானமானது 21 ஊழியர்கள் மற்றும் 178 பயணிகளுடன் நவம்பர் 22 ஆம் திகதி புறப்பட்டுள்ளது.
விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில், ஜப்பான் மீது பறந்துகொண்டிருக்கும் போது விமானம் கடுமையாக குலுங்கியதாக தெரிய வந்துள்ளது.
தைபே நகரில் இருந்து சிக்காகோ வரை 13 மணி நேர பயணம் என்பதல் விபத்தில் சிக்கிய நபர்களுக்கு உடனடியாக போதிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது.
இருப்பினும் காயமடைந்த எவருக்கும் உயிரபாயகட்டத்தில் இல்லை எனவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது