சர்கஸ் ஒன்றில் இருந்து புலி ஒன்று தப்பித்து வீதிக்கு வந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை மாலை பரிசில் இடம்பெற்றுள்ளது.
200 கிலோ எடை கொண்ட இந்த இராட்சத புலி, பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள சர்கஸ் ஒன்றில் இருந்து தப்பித்துள்ளது. France 2 தொலைக்காட்சி அலுவலகத்துக்கு முன்னால் புலி நின்றிருந்ததாகவும், பலர் அதை அதிர்ச்சியுடன் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளனர். பலர் சமூக வலைத்தளங்களில் இது குறித்து பதிவிட்டு வருகின்றனர். இதில் பலர் தீயணைப்பு படையினருக்கு அழைத்து தகவலை சொன்னதாகவும் அறிய முடிகிறது. சம்பவத்தை தொடர்ந்து T3a ட்ராம் சேவைகள் தடைப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாலை 6 மணியில் இருந்து சிலமணி நேரம் சேவைகள் தடைப்பட்டதாக RATP அறிவித்திருந்தது.
அதற்குள்ளாக, சர்கஸின் நிறுவன அதிகாரிகளால் குறித்த புலி வீதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டது. இதனால் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ‘நாம் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்னரே புலி இறந்துவிட்டது!’ என தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். சற்று நிமிடத்துக்கெல்லாம் ‘ஆபத்து விலகிவிட்டது. பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம்!’ என காவல்துறையினர் அவர்களது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டனர்.