பயங்கரவாத தடைச்சட்ட விவகாரம் அமெரிக்காவிடம் முறையிட்ட வடமாகாண சபை
ஜ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கை அரசாங்கத்தின் இணக்கப்பாட்டுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் பயங்கரவாத தடைசட்டத்தை நீக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
எனவே அதனை நடைமுறைப்படுத்த அமெரிக்கா நடவடிக்கை எடுக்கவேண்டும். என வடமாகாணசபை வலியுறுத்தியுள்ளதாக மாகாணசபை அவைதலைவர் சீ.வி.கே. சிவஞானம் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அத்துல் கேஷாப் தலமையிலான குழுவினர் இன்றைய தினம் மாலை 2.45 மணியளவில் வடமாகாணசபைக்கு விஐயம் மேற்கொண்டு மாகாணசபை அவைதலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலமையில் உறுப்பினர்கள் அமைச்சர்களையும் சந்தித்து பேசியுள்ளனர்.
இச் சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம்
மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இச் சந்திப்புத் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
நாம் இரு விடயங்களை பிரதானமாக சுட்டிக்காட்டியுள்ளோம். குறிப்பாக இலங்கை அரசாங்கத்தில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு முயற்சியில் தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்புக்கள் உள்வாங்கப்படவேண்டும்.
அதனடிப்படையில் தீர்வும் தமிழ் மக்கள் எதிர்பார்ப்பை நினைவேற்றுவதாக அமைய வேண்டும் என்பது ஒரு விடயம்.
இரண்டாவது விடயம் ஜ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கை அரசாங்கத்தின் இணக்கப்பாட்டுடன் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அதற்கமைய அந்த சட்டம் நீக்கப்பட வேண்டும். மேலும் அந்த சட்டத்தின் கீழான நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. உதாரணமாக முன்னாள் போராளிகள் கைது செய்யப்படுகின்றார்கள். இவ்வாறான சம்பவங்கள் நிறுத்தப்படவேண்டும்
.அரசாங்கம் பயங்கரவாத தடைசட்டத்திற்கு மாற்றாக ஒரு சட்டத்தை உருவாக்க முயற்சிக்கலாம். ஆனால் முதலில் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் செய்யப்படும் நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும். என்பதை நாம் வலியுறுத்தியுள்ளோம்.
ஜ.நா தீர்மானத்தை நிறைவேற்ற முன்னின்று உழைத்த நாடு என்றவகையில் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றவும் அமெரிக்கா நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளதுடன், படையினருக்கான நில அபகரிப்புக்கள் மற்றும் மீள்குடியேற்றத்திற்கான தடைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும் என கோரியுள்ளோம் என்றார்.