மனித உரிமைகளை மதிக்காத பயங்கரவாத தடைச் சட்டத்தை இலங்கையில் நீக்க வேண்டும் என அநுர (Anura Kumara Dissanayake) அரசாங்கத்திடம் மக்கள் பேரணிக்கான இயக்கம் (Movement of for People’s Council) கோரிக்கை விடுத்துள்ளது.
மக்கள் பேரணிக்கான இயக்கம் நடத்திய ஊடக சந்திப்பிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு மேலும் குறிப்பிடுகையில், “பயங்கரவாத தடைச்சட்டத்தை (Prevention of Terrorism Act) நீக்குவோம் என்பது அநுர அரசாங்கத்தின் ஒரு கொள்கையாக இருந்தது. ஆனால் இன்று அது காணாமல் போய்விட்டது.
இன்று அரசாங்கம் பொறுப்பேற்று எத்தனையோ நாட்கள் கழிந்து விட்டது. ஜனாதிபதி வந்து எத்தனையோ மாதங்கள் கடந்து விட்டது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அடைந்த பிறகும் அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கு எந்தவொரு ஆரம்பக்கட்ட நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
கடந்த காலங்களில் ஏற்பட்ட யுத்தத்தோடு சம்மந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தங்களை நிரூபிப்பதற்கான எந்தவொரு சந்தர்ப்பமும் வழங்கப்படவில்லை.
அவர்கள் ஒருவரிக் கையெழுத்தின் ஊடாக விரும்பிய நேரத்தில் விரும்பியவாறு தடுத்து வைக்கப்பட்டு பதினைந்து பதினாறு வருடங்களின் பின்னர் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டார்கள்.
மனித உரிமைகளை மதிக்காத இந்த சட்டத்தை நீக்க வேண்டும். இதற்குப் பதிலாக இருக்கின்ற சட்டங்களின் கீழ் சந்தேக நபர்களை கைது செய்யலாம் விசாரிக்கலாம்.
பதினைந்து வருடங்கள் சிறையிலிருந்து குற்றமற்றவர்கள் என விடுதலையான நிரோசன் மற்றும் சுபேந்திரனை அதே சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்தமை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஊடாக யாரும் கைது செய்யப்படக்கூடாது, அந்த சட்டம் இந்த நாட்டிலிருந்து நீக்கப்பட வேண்டும் மற்றும் அரசியல் கைதிகளுடைய விடுதலை என்பன உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்” என தெரிவித்தார்.