டெல்லியில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதற்கு ஒருவிதத்தில் நியூஸிலாந்து பீல்டிங்கும் காரணம், ரோஹித் சர்மா, ஷிகர் தவண், விராட் கோலி ஆகியோருக்கு கேட்ச்கள் நழுவவிடப்பட்டது.
இந்நிலையில் கான்பூர் தோல்விக்குப் பிறகு வெற்றியை எதிர்நோக்கி ஆடிய நியூஸிலாந்து தோல்வியடைந்தது குறித்து அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கடும் ஏமாற்றமடைந்துள்ளார்.
“அனைத்துத் துறைகளிலும் நாங்கள் வீழ்த்தப்பட்டோம். பீல்டிங் உட்பட, பீல்டிங்தான் நியூஸிலாந்து அணியின் பெருமையாக இருந்து வருகிறது.
கேட்ச்கள் நழுவவிடப்பட்டதுதான் தோல்விக்கு முக்கிய காரணம். இதுதான் வேறுபாட்டை ஏற்படுத்தியது. இதனால் இந்திய வீர்ர்கள் 200 ரன்களைக் கடந்தனர், இந்த மைதானத்தில் இது மிகப்பெரிய ஸ்கோர்.
பனிப்பொழிவு இருந்தது உண்மைதான், ஆனால் எங்கள் அணியில் உள்ள அனுபவத்தை வைத்துப் பார்க்கும் போது பனிப்பொழிவை கேட்ச் விட்டதற்குக் காரணமாக கூறுவதற்கில்லை.
இப்பகுதிகளில் மாலை வேளைகளில் ஆடும்போது பனிப்பொழிவு என்பது எப்போதும் உள்ளதே. எனவே அதனை ஒரு சாக்காக கூற முடியாது.
எங்கள் திறமைக்கு மிகத்தாழ்வாக ஆடினோம். மிகச்சிறந்த இந்திய அணி எங்களை அனைத்துத் துறைகளிலும் வீழ்த்தியது என்றே கூற வேண்டும்” என்றார் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்.