ஒரு பேப்பர் பேனா எடுத்துக்கொண்டு, 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்திய கிரிக்கெட்டின் மானம் காத்தவர்கள் பெயர்களைப் பட்டியலிட்டால், அதில் நிச்சயம் இடம் பிடிக்கும் பெயர் அனில் கும்ப்ளே.
இந்திய அணியின் வெற்றிகளில் மிக முக்கியப் பங்காற்றிய வீரர்களில் ஒருவர். டெஸ்ட் போட்டிகளின் வெற்றி தோல்விகள் பந்துவீச்சாளர்களால் தீர்மானிக்கப்படுகிறது என்றால், அதில் கும்ப்ளே தன் பங்கிற்கு இந்தியாவிற்கு தலைசிறந்த வெற்றிகளைத் தேடித்தந்துள்ளார். ஜம்போ – இந்தியப் பந்துவீச்சாளர்களில் முதன்மையானவர், முத்திரை பதித்தவர்!
தன்னுடைய மானசீக குருவான, பகவத் சந்திரசேகர் பிறந்த மண்ணில் பிறந்த காரணத்தாலோ என்னவோ, ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கான உயரமும், நேர்த்தியும் இருந்தும், ‘லெக் ஸ்பின்னில்’ புதுமையைப் புகுத்தி, 19 வயதிலேயே இந்திய அணிக்குத் தேர்வானார். 1990-ல் தன்னுடைய முதல் போட்டியை விளையாடினாலும், அடுத்த வாய்ப்புக்காக இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. இதற்கிடையே, நிறவெறி சர்ச்சையிலிருந்து மீண்டு சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பியது தென்னாப்பிரிக்கா. இந்த நேரத்தில் கும்ப்ளே, இரானி கோப்பையில், 13 விக்கெட்டுகளைச் சாய்த்து, தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்து, தென்னாப்பிரிக்கா சுற்றுப் பயணத்தில் இடம்பிடித்தார்.
கும்ப்ளே, தன் வருகையை அந்நிய நாட்டில், அதுவும் வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமான ஜோஹன்னஸ்பர்க் ஆடுகளத்தில் அறிவித்தார். 44 ஓவர்கள் வீசி, 53 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஆறு விக்கெட்டுகள் வீழ்த்திய அந்தத் தருணமே, கும்ப்ளே சர்வதேச அரங்கில் தனித்துத் தெரிந்துவிட்டார். கிரிக்கெட்டில், லெக் ஸ்பின் என்பது மிகவும் கடினமான வித்தை. ஆஃப் ஸ்பின் போடுவதைப்போல் அசாத்தியமான ‘கன்ட்ரோல்’, லெக் ஸ்பின்னில் இருக்காது. ஆஃப் ஸ்பின் என்பது, கையின் முன் பக்கத்திலிருந்து பந்தைச் சுழல வைக்க வேண்டும். அப்படிச் செய்கையில், பந்து ‘புஃல் டாஸாக’ மாறுவதற்கு வாய்ப்பில்லை. மேலும், ஆஃப் ஸ்பின் போடுவது என்பது கொஞ்சம் இயல்பாக அனைவரும் செய்யக்கூடிய வித்தைகளில் ஒன்று. இதற்கு, சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ், மாக்ஸ்வெல், டுமினி… என அணிக்கொரு வீரரை உதாரணம் சொல்லலாம். ஆனால், இவர்கள் எல்லோரும் எப்போதும் விக்கெட் வீழ்த்துவார்களா என்றால், அதற்கு உத்தரவாதம் இல்லை.
அதேநேரத்தில், லெக் ஸ்பின் போடுவது கடினம். பந்து உங்களது புறங்கையிலிருந்து வெளிப்பட வேண்டும். பந்தை சுழல வைக்க, மணிக்கட்டை மட்டும் சுழற்றாமல், ஒட்டுமொத்த உடம்பையும் வளைக்க வேண்டும். ஆடுகளத்தில் பெரிதாகப் பந்து வீச்சாளர்களின் காலடித் தடங்கள் பதிந்திருக்கவில்லை என்றால் (ஏனென்றால் அந்தத் தடத்தை பயன்படுத்திதான் லெக் ஸ்பின் பௌலர்கள் விக்கெட்டை அள்ளுவார்கள்) பேட்ஸ்மன்களுக்குக் கொண்டாட்டம்தான். லெக் ஸ்பின் பௌலர்களின் பந்தை அல்வா சாப்பிடுவதைப் போல சாப்பிட்டு விடுவார்கள். இப்படி, லெக் ஸ்பின் போடுவதே கொஞ்சம் கடினமான விஷயமாக இருக்கையில், 18 வருடங்கள், கொஞ்சம் கூட அலுக்காமல் சலிக்காமல், எவ்வித தொய்வுமின்றி, விக்கெட் ஒன்று மட்டுமே குறி என்று இயங்கிய கும்ப்ளேவின் முக்கியத் தருணங்களைப் பார்ப்போம்.
பகவத் சந்திரசேகரைப் போலவே, ஒரு ஸ்பின்னருக்குத் தேவையான ரன் அப்பை விட அதிகமாகவே ஓடி வந்து போடக்கூடிய பௌலர், கும்ப்ளே. ஆடுகளம் சுழலுக்கு ஏதுவாக இல்லாவிட்டாலும், ஒரு பக்கம் அப்படியே ரன்னைக் கட்டுப்படுத்தும் வேலையில் இறங்கிவடுவார். மற்ற ஸ்பின்னர்களை அடித்து ஆடுவதைப்போல, கும்ப்ளேவை இறங்கி வந்தெல்லாம் அடிக்க முடியாது. காரணம், கும்ப்ளேவின் உயரம். தன் ஆறடி உயரத்தைக் கொண்டு, அதற்கு மேலும், கையை ஓர் அடி உயர்த்தி, சுமார் ஏழு அடி உயரத்திலிருந்து நூறு கிலோமீட்டர் வேகத்தில் பந்தை விக்கெட்டுகளை நோக்கி செலுத்திக்கொண்டே இருந்தால் எங்கிருந்து அடிப்பது? டெஸ்ட் கிரிக்கெட்டில், ஒரு ‘ஸ்பெல்’ என்பது மிஞ்சிப்போனால் பத்து முதல் பதினைந்து ஓவர்கள் வரை ஸ்பின்னர்கள் வீசுவார்கள். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ரன்களை அள்ளிக்கொடுத்தாலும் ஒரே நாளில் சளைக்காமல் 35 ஓவர்கள் கூட வீசி எதிரணியினரைக் கட்டுக்குள் வைத்திருப்பார் இவர்.
மாடர்ன் ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான, ஸ்டீவ் வாஹ், கும்ப்ளேவைப் பற்றி குறிப்பிடுகையில், “ஷேன் வார்னைப் போல, அதிரி புதிரியாக எந்நேரமும் தலைப்புச் செய்தியாக கும்ப்ளே இல்லாவிடினும், அவருடைய வேலையை மிகவும் நிதானமாக இந்திய அணிக்குச் செய்து முடிப்பதில் வல்லவர். அவரின் நேர்த்தியான பந்துவீச்சைச் சமாளித்து மற்றவர்களை அடித்து ரன் குவிப்பது என்பது இயலாத காரியம்” என்றார்.
முதல் இன்னிங்ஸ்
அனில் கும்ப்ளேவின் கிரிக்கெட் வாழ்க்கையை இரண்டு பகுதியாகப் பிரிக்கலாம். ஆரம்பத்தில், இரண்டு வருடங்கள் பொறுத்து, உள்நாட்டு போட்டிகளில் தொடர்ந்து விக்கெட்டுகளைக் குவித்தாலும், அதேபோன்ற மேஜிக்கை சர்வேதச அரங்கில் பிரதிபலிக்க முடியவில்லை. தன்னை மெருகேற்றிக்கொள்ள, இங்கிலாந்தின் உள்நாட்டு போட்டிகளில் பங்கேற்று ஒரே சீசனில் 100 விக்கெட்டுகளுக்கு மேல் குவித்து, அணி வெற்றிபெற உதவினார். 2011-ல் நடைபெற்ற உலகக்கோப்பையை இந்தியா வெல்லும் என்று எதிர்பார்த்ததைப்போல, 1996 உலகக்கோப்பையிலும் பெரிதும் எதிர்பார்த்தனர் ரசிகர்கள். அரையிறுதியில் இந்தியா ஏமாற்றமளித்தாலும், கும்ப்ளேதான் பங்கேற்ற ஏழு ஆட்டங்களில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்தில் கற்ற வித்தைகளைக் கொண்டு, அடுத்தடுத்து இந்தியாவில் நடந்த டெஸ்ட் ஆட்டங்களில் முகமது அசாருதீன் தலைமையில், தொடர்களைக் கைப்பற்றி, மொத்தத்தில் இந்தியாவை இந்திய மண்ணில் வீழ்த்துவதென்பது இயலாத காரியம் என்பதை தன்னுடைய சுழல் கொண்டு சுழற்றி அடித்தார்.
1999-ம் ஆண்டில், கார்கில் பிரச்னை முடிவுக்கு வந்த பின்னர், பாகிஸ்தான் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சென்னை, டெல்லி ஆகிய இடங்களில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளை யாருமே மறக்கமுடியாது. முதுகு வலியோடு தனியாளாக சச்சின் போராடி, வெற்றிக்கு மிக அருகில் அணியை அழைத்துச் சென்று அவுட் ஆனவுடன், சடசடவென மற்றவர்கள் அவுட் ஆக, 12 ரன்களில் வெற்றியை இழக்க, அடுத்த போட்டியில் வென்றே தீர வேண்டிய கட்டாயத்துக்கு இந்திய அணி தள்ளப்பட்டது. 400 ரன்களுக்கு மேல் இலக்கை நிர்ணயித்தாலும், பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் 100 ரன்களுக்கு மேல் விக்கெட்டை இழக்காமல் சவால் விடுக்க, கும்ப்ளேவின் என்ட்ரி, அன்றைய நிஜ மெர்சல் என்ட்ரி. தன்னுடையை ‘ஸ்டம்ப் டு ஸ்டம்ப்’ பந்துவீச்சால் பத்து விக்கெட்டையும் அள்ளினார். உலகமே வாயடைத்துப்போனது. ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இரண்டு டெஸ்ட் போட்டிகளின் நான்கு இன்னிங்ஸிலும், தலா ஐந்து விக்கெட்டுகள் என, பாகிஸ்தானின் சக்லைன் முஷ்டாக் மொத்தம் 20 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார். கும்ப்ளேவோ, 6,4,1 என மொத்தமாக 11விக்கெட்டுகளை மட்டுமே தன்னுடைய கணக்கில் வைத்திருந்தாலும், புல்லட் ரயிலைப் போல, கடைசி இன்னிங்ஸில் பத்து விக்கெட்டையும் வீழ்த்தி, “என்னுடைய இடத்தில நாந்தான் ராஜா” என்று சொல்லாமல் சொன்னார்.
இரண்டாம் இன்னிங்ஸ்
சர்வேதச அரங்கில், 12 வருடங்கள் கழித்தே டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கிரிக்கெட் விமர்சகர்கள் எப்போதுமே கும்ப்ளேவைப் பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை. ஏனென்றால், விக்கெட் வீ ழ்த்துவதின் இடைவெளி (ஸ்ட்ரைக் ரேட்) கும்ப்ளேவிற்கு சராசரியைவிட அதிகமாக இருந்ததே காரணம். 2000-த்துக்குப் பிறகு, தன் பௌலிங் ஸ்டைலை மாற்றி, கூக்ளி எனப்படும், லெக் ஸ்பின்னரின் இயல்புக்கு எதிராகச் சுழலும் பந்தையும், டாப் ஸ்பின் எனப்படும் எகிறி எம்பி அடிக்கக் கூடிய அஸ்திரத்தையும் செயல்படுத்தத் தொடங்கினார். இதனால், இந்தியாவில் மட்டுமல்லாமல், இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணிலும் டெஸ்ட் போட்டிகளை வெல்ல உதவினார்.
“கும்ப்ளே இல்லையென்றால், நான் கேப்டன் பதவியிலிருந்து விலகிக்கொள்கிறேன்” என்று பகிரங்கமாக கங்குலி அறிவிக்க, அதன் பின்னரே வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களில் கும்ப்ளேவை நீக்காமல் தேர்வாளர்கள் செயல்பட்டனர். பௌலிங் போடும் ‘கிரீசை’ வெவ்வேறு ஆங்கிள் கொண்டு பயன்படுத்தி, ஆடுகளம் ஸ்பின் பௌலிங்கிற்கு ஏதுவாக இல்லாவிட்டாலும், பந்தின் வேகம், மற்றும் பந்தை ரிலீஸ் செய்யும் விதத்தில் ஹர்பஜன் உடன் கூட்டுச் சேர்ந்து பட்டையைக் கிளப்பினார். இதன் காரணமாகவே, முதல் பன்னிரண்டு வருடங்களில் 300 விக்கெட்டுகளும், அடுத்த ஏழு வருடங்களில் 319 விக்கெட்டுகளும் வீழ்த்தி ஆச்சர்யப்படவைத்தார்.
டிராவிட் தலைமைப் பொறுப்பிலிருந்து விலக, சச்சின் எனக்கு வேண்டாம் எனச் சொல்ல, தோனியோ அப்போதுதான் இருபது ஓவர் அணியைக் கரை சேர்த்துக்கொண்டிருக்க, தன்னுடைய கடைசிக்கட்டத்தில், அணியின் தேவையை உணர்ந்து தலைமையேற்க ஒப்புக்கொண்டார். பல்வேறு சர்ச்சைகளை உள்ளடக்கிய 2007-2008 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை மிகுந்த நேர்மையோடும், துணிவோடும் அவர் வழிநடத்தியதே இதற்குச் சான்று.
டெஸ்ட் ஆட்டங்களில் மட்டுமே தன்னுடைய ஆளுமையை நிறுவாமல், ஒருநாள் போட்டிகளிலும் 337 விக்கெட்டுகளை தன் வசம் கொண்டு, மொத்தமாக 956 விக்கெட்டுகள் என இந்திய அணியின் சுமையைப் பெரிதும் சுமந்த போர் வீரர்களில் ஒருவராக கும்ப்ளே என்றென்றும் நினைவுக்கூரப்படுவார். தாவாங்கட்டையில் அடிபட்டால் கூட, கட்டுப்போட்டுக்கொண்டு வந்து, லாராவின் விக்கெட்டை வீழ்த்திய செயலொன்று போதும், கும்ப்ளே கிரிக்கெட்டை எப்படி நேசித்தார் என்பதற்கு…
ஐபிஎல் போட்டிகளில் அணிகளை நிர்வகித்தது, பயிற்சி கொடுத்தது எனத் தன் அனுபவத்தின் மூலம், இந்திய அணியை ஒரு வருடம் திறம்பட வழிநடத்தினார். 1-1 என்ற நிலையில், இந்த வருடம் இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற கடைசி ஆட்டத்தில், விராட் கோலி காயம் காரணமாக விலக, அவருக்குப் பதில் ஒரு பேட்ஸ்மேனை அணியில் சேர்க்காமல், இன்று நாடே கொண்டாடும் குல்தீப் யாதவை சேர்த்து, ஆஸ்திரேலியர்களுக்கு அதிர்ச்சியளித்தார். அவரின் சுழலைச் சமாளிக்க முடியாமல், முதல் நாளே இந்தியா ஆதிக்கம் செலுத்தத் தொடங்க, அட்டகாசமான வெற்றியை இந்தியா பதிவுசெய்தது.
திரும்பிப் பார்த்தால், 26 வருடங்கள், கிரிக்கெட்டை மிகுந்த மரியாதையுடனும், நேர்மையோடும் விளையாடி, நிர்வகித்து மகத்தான கிரிக்கெட் வீரராக நிற்கிறார் கும்ப்ளே. தன்னுடைய சொந்த ஊரில், ஒரு தெருவுக்குத் தன்னுடைய பெயரைப் பதித்த ‘ஜம்போவிற்கு’ பிறந்தநாள் வாழ்த்துகள்!