பணம் தாராத காரணத்தால் சகமாணவனை கொலை செய்த 11 வயது மாணவன்: பிரான்ஸ் பள்ளியில் பயங்கரம்
பிரான்சில் பாடசாலை ஒன்றில் சகமாணவனை 11 வயது மாணவன் குத்தியதில், அம்மாணவன் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Lyon நகரில் அமைந்துள்ள Anatole-France primary என்ற பாடசாலையில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 11 வயது மாணவன் சகமாணவனிடம் தனக்கு பணம் தருமாறு கேட்டு சண்டையிட்டுள்ளான்.
அம்மாணவன் கொடுக்க மறுக்கவே, சகமாணவர்கள் முன்னிலையில் வைத்து அம்மாணவனின் வயிற்றில் ஓங்கி குத்தியுள்ளான், இதில் நிலைகுலைந்த மாணவன் தீவிரமாக பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளான் என பொலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த பாடசாலை அமைந்துள்ள நகரம், பொருளாதாரம் ரீதியாக பின்தங்கியுள்ள இடம் மட்டுமல்லாது, குற்றங்கள் அதிகளவில் நடைபெறும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் நாட்டு சட்டப்படி 10 வயது முதல் 13 வயதுக்குட்பட்டவர்கள் கொலைக்குற்றங்கள் புரிந்தால் அவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படமாட்டாது, மாறாக எச்சரிக்கை தண்டனை, வீட்டில் சிறைவைப்பது அல்லது குடிமை திறன் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
தற்போது, சட்ட காரணங்கள் கருதி இவ்விரு மாணவர்களின் பெயர்களும் வெளியிடப்படவில்லை, குற்றம் செய்த மாணவன் தற்போது பெற்றோர் வசம் உள்ளான்.
மேற்கூறிய தண்டனைகளில் ஏதேனும் ஒன்று இம்மாணவனுக்கு வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.