இலங்கையில் கடந்த வருடத்திலும் காணாமல் போன சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், படையினரை பாதுகாக்க அரசாங்கம் முன்வந்துள்ளமை தொடர்பாக இலங்கையின் அரச தலைவர்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு சாடியுள்ளது.
மைத்திரி – ரணில் அரசாங்கத்தின் இதுவரையான ஆட்சி தொடர்பாக கண்காணிப்புகளை மேற்கொண்ட சர்வதேச அறகூறுநர்களின் ஆணைக்குழு (ICJ), படையினரை பாதுகாக்கும் மனநிலையுடன் கூடிய அரசாங்கம் ஒன்று காணாமல் போனோருக்கு நீதியை நிலை நாட்டுமா என கேள்வி எழுப்பியுள்ளது.
ஜெனிவா மனித உரிமை பேரவையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 10 நாட்கள் நடைபெறும் இலங்கையின் மனித உரிமை நிலைமை தொடர்பான மீளாய்வின் போது, சர்வதேச அறகூறுநர்களின் ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு பதிலளிக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது.
பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான பொறுப்புக் கூறல் இல்லாதது குறித்து தாம் கவனம் செலுத்தியுள்ளதாக ஜெனிவாவை தலைமையகமாக கொண்ட சர்வதேச அறகூறுநர்களின் ஆணைக்குழு கூறியுள்ளது.
அரசாங்கம் மாறிய போதிலும் படையினரை பாதுகாக்கும் அரசாங்கத்தின் மனநிலை, 2016 ஆம் ஆண்டிலும் காணாமல் போன சம்பவங்கள் நடந்துள்ளமை என்பன பலவந்தமாக காணாமல் போக செய்யும் சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வர இலங்கை அரசுக்கு இருக்கும் அர்ப்பணிப்பு தொடர்பில் கேள்விகளை எழுப்பியுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக போரிட்ட படையினர் மீது சுமத்தப்படும் மனித உரிமை மீறல் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர்களை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட போவதாக ஜனாதிபதி கடந்த மாதம் கூறியிருந்தார்.
அரசாங்கம் வழங்கும் சட்ட சலுகை காரணமாகவே குற்றம் சுமத்தப்பட்ட படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் தண்டனை விதிக்கப்படாமல் விடுவிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பும், இலங்கை மனித உரிமை ஆணைக்குழு உட்பட பல அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
வடக்கு, கிழக்கில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள சர்வதேச அறகூறுநர்களின் ஆணைக்குழு, காணாமல் போன தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என கடந்த 8 ஆண்டுகளாக கோரி வரும் உறவினர்களுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என்பதை இந்த ஆர்ப்பாட்டங்கள் தெளிவாக புலப்படுத்துகின்றன எனக் கூறியுள்ளது.
மேலும் காணாமல் போனோர் சம்பந்தமாக செயலகத்தை கடந்த 2016 ஆம் ஆண்டில் நிறுவி, அதற்கு வரவு செலவுத் திட்டத்தில் கோடிக்கணக்கில் பணத்தை ஒதுக்கியுள்ளதாக கூறப்பட்ட போதிலும், அந்த செயலகம் இன்னும் செயற்பட ஆரம்பிக்கவில்லை என சர்வதேச அறகூறுநர்களின் ஆணைக்குழு, ஐக்கிய மனித உரிமை ஆணைக்குழுவிடம் சுட்டிக்காட்டியுள்ளது.
பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து சகல மக்களையும் பாதுகாக்கும் சர்வதேச இணக்கப்பாட்டுக்கு இணங்கியமை தொடர்பில், சர்வதேச அறகூறுநர்களின் ஆணைக்குழு, பாராட்டுக்களை தெரிவித்துள்ள போதிலும் காணாமல் ஆக்கப்படும் சம்பவங்களுடன் தொடர்புடை குற்றவாளிகளை தண்டிக்கக் கூடிய வகையில் சட்டத்தை உருவாக்கவில்லை என அரசாங்கம் மீது குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கை மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கம் வழங்கிய பல வாக்குறுதிகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்றப்படவில்லை எனவும் சர்வதேச அறகூறுநர்களின் ஆணைக்குழு, ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு நினைவூட்டியுள்ளது.
பாதுகாப்பு துறையில் மறுசீரமைப்பு, போர் நடந்த பகுதியில் இருந்து இராணுவத்தை அப்புறப்படுத்துவது, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல், அதிகாரத்தை பரவலாக்குவதற்காக 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது என வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக மனித உரிமை ஆணைக்குழுவின் 34 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை உறுதியளித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச அறகூறுநர்களின் ஆணைக்குழு, வாக்குறுதிகளை நிறைவேற்ற உரிய கால அட்டவணையை வழங்குமாறும், ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை அரசாங்கம் கண்டித்துள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் யோசனைகளை அமுல்படுத்த வேண்டும் எனவும் சர்வதேச அறகூறுநர்களின் ஆணைக்குழு கூறியுள்ளது.