நீதன் சாணிடம் அப்படியென்ன சிறப்பு இருக்கின்றது? அவருக்கெதிராகத் தொடரும் அழுத்தங்கள் எப்படியேற்படுகின்றன?
அண்மையில் புதிய ஜனநாயகக் கட்சியிடமிருந்து அதன் அங்கத்துவர்களிற்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. அதில் ஸ்காபரோ ரூச் ரிவரில் இடம்பெறும் தேர்தலில் தங்களது வேட்பாளரின் பதாதைகள் பல இனந்தெரியாதவர்களால் அப்புறப்படுத்தாகவும்,
அவற்றை மீள வைப்பதற்கு நான்காயிரம் டொலர்கள் பணம் தேவை எனவும் அந்த மின்னஞ்சலில் கட்சிக்காரர்களிடம் நிதிவேண்டி கோரிக்கை விடப்பட்டிருந்தது. நீதன் சாணைப் பற்றிய செய்திகளே தொடராக வருவதால் பதாதைகள் அப்புறப்படுத்தப்படுகின்றன என்ற விடயம் யார் நீதன் சான் என்பதை ஆராய வைத்தது.
நீதன் சாண் இளவயதிலேயே துடிப்பானதொரு இளைஞனாக சமூகசேவை விரும்பியாகச் செயற்பட ஆரம்பித்தவர். 1996ம் ஆண்டில் தமிழர்கள் ஒரு விழிப்புனர்வு நிகழ்வை ஒன்றாரியோ பாராளுமன்றத்திற்கு முன்னால் வைத்த போது அங்கே,
தமிழர்களிற்கு இழைக்கப்படும் அநீதிகளை விளக்கும் ஒரு காட்சியாக ஒரு சிறைக்கூட அமைப்பைச் சித்தரித்து, அதற்கு வெளியே இராணுவ சீருடை தரித்து துப்பாக்கி ஏந்திய சிறீலங்கா இராணுவச் சிப்பாயாக மாறுவேடம் தரித்து நின்ற நீதன் சாண்,
இராணுவச் சிப்பாய்கள் எவ்வாறு தமிழர்களை வதைக்கின்றார்கள் என்பதை செய்துகாட்டியபடி நின்றிருந்தார். அப்போது அவர் ஒரு பாடசாலை மாணவன். இப்போது 20 ஆண்டுகள் கழித்து அதே ஒன்றாரியோப் பாராளுமன்றத்திற்கு உறுப்பினராகச் செல்வதற்கான போட்டியாளராக களமிறங்கியிருக்கின்றார்.
கனடியத் தமிழர்களுடன் பலவகைகளிலும் தொடர்புபட்ட போராடங்களில் பங்கேற்றிருந்தாலும், இவருக்கு அரசியலில் நுழைகின்ற ஆசை விதைக்கப்பட்டது 2003ம் இடம்பெற்ற தேர்தல்களத்தில். அப்போது இவர் ஒரு பல்கலைக்கழக மாணவர், பாடசாலை அறங்காவற் சபைக்கான உறுப்பினராகப் போட்டியிட்டிருந்தார்.
கனடாவில் தமிழ் இளைஞர்களிடைய வன்முறைகள் அதிகரித்திருந்த போது கான்ரைட் எனப்படும் கனடியத் தமிழ் இளைஞர்கள் முன்னேற்ற நிலையத்தை ஆரம்பித்தவர்களில் ஒருவராகவும், அதேபோன்று கனடியத் தமிழ்க் காங்கிரஸ் என்ற அமைப்பை வழிநடத்த அபிமன்யு சிஙகம் அவர்களிற்கு உறுதுணையாகவும் இருந்திருந்தார்.
அதேபோன்று கனடாத் தமிழீழச் சங்கத்தின் இயக்குனர் சபை உறுப்பினராகவும், கனடிய தேசிய மக்களவை என்கிற அமைப்பின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவராகவும் இருந்திருக்கின்றார். மார்க்கம் தமிழ் அமைப்பை உருவாக்கியதில் முக்கிய பங்காளியாகவும்,
அதேவேளை தமிழர் மரபுரிமை மாதத்தை மூன்றுபடி அரசுகளும் அங்கீகரிக்க வேண்டுமென்ற விவகாரத்தை 2000 ஆண்டுகளின் இறுதியில் இருந்து பல காலங்களாக எடுத்து வெற்றி காண்பதற்கு வழி கோலியவர்.
மறுபக்கமாக ஈழத்தமிழர் பிரச்சினை என்று வருகின்ற போது, தனது கனடிய அரசியல் எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடும் என்ற சிந்தனை சற்றுமேயின்றி, எந்தக் களத்திலும் முகம் காட்டும், எந்தமேடையிலும் குரல் ஒலிக்கும் ஒருவராகவும் இன்று வரைத் திகழ்ந்து வருகின்றார்.
அதைவிட ஒலிபரப்பு, ஒளிபரப்புத் துறையில் ஒது தகவல் பகிர்வாளராக, நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, இப்படியான இந்த இளைஞரின் தேர்தல் போட்டிகளின் இறுதிகாலப் போட்டிகள் ஸ்காபரோ – ரூச் ரிவர் தொகுதியை மையப்படுத்தி இருந்ததால் அவருக்கென ஒரு வாக்காளர்கள் கூட்டத்தை ஏற்படுத்தி ஆரோக்கியமான வாக்கு வங்கியை வைத்திருக்கின்றார்.
இரண்டு தேர்தல்களில் நீதனை ரொறன்ரோ ஸ்ரார் பத்திரிகை தகுதியுள்ள வேட்பாளர் என பரிந்துரை செய்திருந்த போதும், இந்தமுறை அவர் வகிக்கும் கல்விச்சபை அறங்காவலர் பதவியை விட்டு விலகக் கூடிய ஆபத்தைச் சுட்டிக்காட்டியிருந்தது.
அதாவது கல்விச்சபை அறங்காவலர் பதவியிலிருந்து சம்பளமற்ற விடுமுறை பெற்றுத் மாகணசபைத் தேர்தலிலே போட்டியிடும் நீதன் சாண் இந்த மாகாணசபைத் தேர்தலிலே வென்றால் மாத்திரமே கல்விச்சபை அறங்காவலர் பதவியைத் துறப்பார்.
எனவே இவர் இந்த மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற எதிர்பார்ப்பை ரொறன்ரோ ஸ்ரார் கொண்டிருப்பதாலேயே இவர் அறங்காவலர் சபைப் பதவியைத் துறக்கலாம் என்ற முடிவிற்கு மேற்படி பத்திரிகை வந்தது எனக் கருதலாம். இருந்தும் இவர் தனது இலக்கை நோக்கி தொடர்ந்து இடைவிடாது தேர்தலில் நிற்பதையே அது முக்கியமாகச் சுட்டிக்காட்டியிருந்தது.
இந்த நிலையில் நீதன் சாணின் தேர்தல் பதாதைகள் பலவந்தமாக இனந்தெரியாதவர்களால் கழற்றப்பட்டதாகவும், அவற்றைப் பிரதியீடு செய்ய நான்காயிரம் டொலர்கள் தேவை எனவும் புதிய ஜனநாயகக்கட்சி அந்தத் தொகுதி வாக்காளர்களிடம் கேட்டிருக்கின்றது.
இதற்கு ஒரு காரணமும் இருக்கின்றது. கடந்த காலத் தேர்தல்களில் சுமார் 4,500 வாக்குக்களை மாத்திரம் பெற்றுவந்த புதிய ஜனநாயககட்சியை இந்தத் தொகுதியில் நீதன் போட்டியிட்டு மூன்று மடங்காக உயர்த்தியது அதற்கான காரணமாக இருந்திருக்கின்றது.
குறிப்பாக 2011ம் ஆண்டுத் தேர்தலில் 13,088 வாக்குகளையும், 2014ம் ஆண்டையத் தேர்தலில் 13,019 வாக்குக்களையும் பெற்றிருந்தார். இது புதிய ஜனநாயகக் கட்சியின் வாக்கு வங்கியா இல்லை நீதன் சாணின் வாக்கு வங்கியா என்ற கேள்விக்கான விடை இது நீதனின் விடாமுயற்சியால் ஏற்படுத்தப்பட்ட வாக்கு வங்கியே என்பதாகும்.
நீதன் வெற்றிக்கணியைத் தவறவிட்டது வெறும் 1,500 வாக்குகளால் தான். லிபரல் கட்சி வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகளில் 1,500 வாக்குகள் இவர் பக்கம் திரும்பியிருந்தால் வெற்றி இவரதுவாக மாறியிருக்கும்.
அரசியலில் நீதன் செல்லவிரும்பும் தூரம், அவர் செயற்படுத்த விரும்பும் நோக்கம், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு குறித்த அவரது பார்வை என்பன எல்லாவற்றையும் விட, கடந்த எட்டு ஆண்டுகளாக இந்தத் தொகுதியில் நீதன் கட்டி வைத்திருக்கும் வாக்கு வங்கி சிதறடிக்கப்படுமா என்பதே நீதனின் ஆதரவாளர்கள் முன்னுள்ள கேள்வியாகவுள்ளது.
இது பற்றிக் கேட்டபோது, தன்னை ஆதரித்த தொகுதி மக்கள், குறிப்பாக தமிழ் மக்கள், தனது கட்சியின் கொள்கைகள் மீது பிடிப்புள்ள கட்சி ஆதரவாளர்கள் தன்னை கைவிடமாட்டார்கள், சென்ற இடமெல்லாம் சிறப்பான வரவேற்புக் கிடைக்கின்றது. வேற்று இனத்தவர்கள் பலரும் என்னுடன் இணைந்து பணியாற்றுகின்றார்கள், ஆதரிக்கின்றார்கள் என்கிறார் நீதன் சாண்.
4,386 total views, 3,526 views today